மதுரையில் செயல்பட்ட இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 1 வயது ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை, 2 லட்சம் ரூபாய்க்கு முறைகேடாக விற்கப்பட்ட விவகாரத்தில், முக்கிய குற்றவாளிகளான அறக்கட்டளை நிர்வாகி சிவக்குமாரும், மதர்ஷாவும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் அலுவலகத்தில் மீட்கப்பட்ட பதிவேடுகளில் வயதானவர்கள் குறித்த விபரங்கள் மட்டுமே இருந்தன. குழந்தையுடன் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த ஆதரவற்ற பெண்கள் குறித்த விபரங்கள் உள்ள பதிவேடுகளை காணவில்லை. அவற்றை சிவக்குமார், மதர்ஷா எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அங்கு வந்து சென்றவர்கள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இரு குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் முடிவுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததால், தாய்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.