27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த மக்கள் பயணம் செய்ய ‘கிரீன் பாஸ்’ திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம், உறுப்பு நாடுகள் அனுமதியளித்த ஃபைஸர், பயோஎன்டெக், மாடர்னா, வேக்ஸ்ஜெர்வியா ஆகிய நான்கு தடுப்பூசிகளைச் செலுத்திய மக்கள் அளிக்கும் கிரீன் பாஸ் மட்டுமே ஏற்கப்படும். பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வழங்கினாலும், அது ஏற்கப்படமாட்டாது. அவர்கள் கட்டாயத் தனிமைக்கு உட்படுத்துப்படுவார்கள் எனத் தெரிவித்தது. கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவல்லா, ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனுமதி கோரியிருந்தார். ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், ‘கோவின் தளத்தின் மூலம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ஏற்காமல் இந்தியப் பயணிகளை ஐரோப்பிய நாடுகள் தனிமைப்படுத்தினால், இந்தியாவுக்கு வரும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் அளிக்கும் தடுப்பூசி சான்றிதழை இந்தியா ஏற்காமல் அவர்களை கட்டாயத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்தியா அறிவித்தது. இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, க்ரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய 7 நாடுகள், இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் தங்கள் நாட்டினுள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளும் விரைவில் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் என தெரியவந்துள்ளது.