சர்வதேச நகைச்சுவை தினம்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.சிரிக்க, சிந்திக்க தெரிந்தவனே மனிதன். சிரிக்க தெரியாதவன் மனித வடிவில் உள்ள மிருகம். இப்படிப்பட்ட சிரிப்பை கொண்டாடும் நாள் இன்று. நவரசங்களுல் ஒன்று நகைச்சுவை.

சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலை வடிவங்கள்  நகைச்சுவை. நகைச்சுவை மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவற்றில் இருந்து மீண்டு ஆரோக்கியமான உடல்,  மன நிலையைப் பேண உதவும். அதோடு வாழ்க்கையை இனிமையாக மாற்றுவதற்கான எளிய வழியும் இதுவே.

எனவே தான் வள்ளுவரும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று நகைச்சுவை உணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். மனிதனின் மற்ற உணர்வுகளைக் காட்டிலும் அன்பினை வெளிப்படுத்தும் தன்மை அதிகமாக இருப்பது நகைச்சுவை உணர்வில் மட்டுமே.

இப்போதைய காலகட்டத்தில் வேலைப்பளு, குடும்பப் பிரச்சனை பொருளாதாரச் சிக்கல் போன்ற சூழ்நிலையில் இருந்து மனதை மாற்றிக்கொள்ள நகைச்சுவை பெரிதும் உதவுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆரோக்கியமாகவும்,  புத்துணர்ச்சியுடனும் இருக்க நகைச்சுவை அவசியம் தேவை. இன்று நாம் அனைவரும் பரபரப்பான சூழ்நிலையில் சிரிக்க மறந்து எதையோ தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், சிரிக்க தெரிந்தால் உலகையும் மறந்து சிறகடிப்போம்.

 

ப.கமலயாழினி