மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வின்றி உழைக்கக் கூடியவர்கள் மருத்துவர்கள். கொரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்யும் மருத்துவர்களின் தியாகத்துக்கு ஈடு எதுவும் இல்லை.
மருத்துவத்துறையில் தகுந்த முன்னேற்றங்களைக் கண்டுள்ள பாரதம், இன்னும் மருத்துவர்களையே பார்த்திராத கிராமங்களுக்கும் சேவை அளிக்க விரைந்துள்ளது. மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள், அவர்களின் நலனிலும் அக்கறைக் கொள்ள வேண்டும். பாரதத்தில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகள். இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் குறைவு.
அதிக மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது.
எனவே, தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொதுநலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதை ஆழமாக வலியுறுத்தி மருத்துவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம். நாம் பார்க்கும் மருத்துவர்களிடம் அன்பையும் நன்றியையும் பகிர்ந்து கொள்வோம்.
ப. மாங்குயில்