பாரதத்தின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா ஜூன் 29ல் நடைபெற்ற ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரித்தல்: சைபர் பாதுகாப்பு’ குறித்த ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் திறந்த விவாதத்தில் உரையாற்றினார். அப்போது, ‘பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாரதமும் ஒன்று. பயங்கரவாதிகள் தங்கள் பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் சமூக ஊடகங்களையே பயன்படுத்துகின்றனர். வளர்ந்துவிட்ட இந்த சைபர் களத்தில், பயங்கரவாத தாக்கங்களை தடுக்க உலகளாவிய அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. இதனை பலமுறை பாரதம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று, டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்தியுள்ளது. இணையவழி தாக்குதலில் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, குழந்தைகள் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றை செயல்படுத்துவதில் இன்னும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை எனினும், இணையம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் அதிகரித்துவரும் பயன்பாடு, பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்தியுள்ளது. அதிக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது’ என கூறினார்.