எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியாக தி.மு.கவினர் கொடுத்தார்கள். ஆனால் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை, சிமெண்ட், ஜல்லி, கம்பி, எம்.சாண்ட் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கட்டுமானத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல திமுக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் வழங்குவதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதாக செய்தி வருகிறது. அதனை மத்திய அரசிடம் முறையாக கேட்டு பெற வேண்டும். நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். நாட்டில் விஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில், மின்வெட்டுக்கு அணில் மீது பழிபோடுவதை ஏற்கமுடியாது’ என கூறினார்.