கோயில் நிலத்தை ஒப்படையுங்கள்

பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு இங்கிலாந்து மகாராணியால் தானமாக வழங்கப்பட்ட 60 ஏக்கர் நிலம், தாராபுரம் தாலுகா பெரிய குமாரபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த ஸ்ரீரங்க கவுண்டர், ராமசாமி கவுண்டர் இருவரும் நிலத்திற்கு உரிமை கோரினர். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஈரோடு நீதிமன்றம், ஆங்கில அரசால் வழங்கப்பட்ட நிலம் கோயில் மூலவருக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தன. அதன் பின்னர், நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைக்கும்படி கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கிலும் குத்தகைதாரர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குத்தகைதாரர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம், நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி குத்தகைதாரர்களுக்கு உத்தரவிட்டு, அவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், ‘பொதுவாக குழந்தைகளுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு என்ற சட்டம் உள்ளது. திருக்கோயில்களில் உள்ள தெய்வங்களும் மைனர்களாகவே கருதப்படுகிறார்கள். பழனி தண்டாயுதபாணியை பக்தர்கள் குழந்தையாக பார்ப்பதால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள். அதன் அடிப்படையில் கோயில் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமி, சிலைகள், கோயில் சொத்துக்களுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு’ என்று நீதிபதி தெரிவித்தார்.