அதிகரிக்கும் காவலர்களுடனான மோதல்

தமிழகத்தில் சமீப காலமாக, குறிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, காவல்துறையினருக்கும் மக்களுக்குமிடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா பொதுமுடக்கக் காலத்திலும்கூட, பல இடங்களில் தி.மு.க நகர துணை செயலர் நீலகண்டன் உட்பட பல தி.மு.கவினர் ஆங்காங்கு காவலர்களை மிரட்டிய சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகின. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் காவலர்கள் இடம் மாற்றப்பட்டனர் என்பது வேதனையான விஷயம்.

சென்னை சேத்துப்பட்டில் ஒரு பெண் வழக்கறிஞர் காவலர்களுடன் அதீதமான வாக்குவாதம் செய்தார். கொண்டித்தோப்புப் பகுதியிலும் இதே போன்றதொரு சம்பவம் நடைபெற்றது. இரு தினங்களுக்கு முன், உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேர் விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடியில் காவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர். தென்னை மட்டையை எடுத்து காவலர்களை தாக்கினர். நெல்லையில் குடிபோதை ஆசாமி ஒருவர் காவலர்கள் மீது சாக்கடையை அள்ளி வீசினார்.

இப்படி, தமிழகத்தில் காவல்துறையினருடன் கட்சியினர், பொதுமக்கள் மோதும் சம்பவங்கள் அதிகரிப்பது என்பது சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும், காவல்துறையினர் மீதான நம்பிக்கையை குறைக்கும், குற்றச் சம்பவங்கள் பெருக வழிவகுக்கும்.  எனவே, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து காவல்துறையின் மாண்பை காக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

மதிமுகன்