தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் – சாதித்தது என்ன?

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள், மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து, திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர், தமிழகத் தேவைகளுக்காக பிரதமரை சந்திக்க தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அவர்கள், நேரம் கேட்டு இருந்தார்.

பிரதமரின் அலுவலகம், ஜூன் மாதம் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமரை சந்திக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதவியாளர் தினேஷ், தனிச் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், செல்வராஜ் உள்ளிட்டோரும் டெல்லிக்குப் பயணம் செய்தனர்.

பிரதமரைச் சந்தித்த உடன், ஜூன் 17 ஆம் தேதி இரவு 7 மணி அளவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஸ்டாலினை சந்தித்தார். அதற்கு அடுத்த நாள், ஜூன் 18 ஆம் தேதி ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து, அன்று இரவே சென்னை திரும்பினார்.

பிரதமரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:

தமிழக முதல்வர் அவர்கள், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமர் அவர்களிடம் மனு அளித்தார்.

நதிநீர் இணைப்பு:

 “மத்திய ஜல்சக்தி துறை” சார்பாக,  “விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு பெரும் பயனளிக்கும் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கேட்டறிந்து, விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து, மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்து உள்ளது. இதற்காக தமிழக எதிர்கட்சி தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு, ஜூன் 3 ஆம் தேதி, நன்றி கடிதம் அனுப்பி உள்ளார்.

மீன்வளம்:

 மோடி அவர்கள், முதன் முறையாக, பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டு முதல், மீன் வளத்திற்கு என்று தனியாக அமைச்சரவையை உருவாக்கி, மீனவர்கள் நலன் மீது, மிகுந்த அக்கறை கொண்டு, செயல்பட்டு வருகின்றார்.

கச்சத்தீவு:

கோரிக்கை மனுவில், கச்சத்தீவு மீட்பதைப் பற்றியும் குறிப்பிடப் பட்டு உள்ளது.  எப்போது, யாரால் கச்சத்தீவு வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நீட் தேர்வு:

 தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், எதிர் கட்சி தலைவராக இருந்த போது, ஜனவரி மாதம் 23 ஆம் தேதி, 2021 அன்று, திருத்தணி அடுத்த அம்மையார் குப்பத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பேசும் போது, “திமுக ஆட்சிக்கு வந்ததும், உறுதியாக போராடி, நீட் தேர்விற்கு, தமிழகத்திற்கு, விலக்கு வாங்கி தருவது தான் எங்களின் கொள்கையாக இருக்கும்” என்று கூறினார்.

மார்ச் 22 ஆம் தேதி, 2021 அன்று, மதுரை வடக்கு தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், “திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் இருந்து 100 சதவீதம் நீட் தேர்வை அடியோடு ஒழித்துக் கட்டுவேன்” என வாக்குறுதி அளித்து இருந்தார்.

மார்ச் மாதம் 14 ஆம் தேதி 2021 அன்று, பெரம்பலூர் மாவட்டத்தில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி பேசும் போது, “திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என உறுதி அளித்து இருந்தார்.

இது நாள் வரை, நீட் தேர்வு ரத்தைப் பற்றி, தமிழக அரசு எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை. மாறாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் அவர்கள், ஜூன் மாதம் 18 ஆம் தேதி, 2021 அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து, “தமிழகத்தில் இந்த நிமிடம் வரை, நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது எனவும், மாணவர்கள் நீட் தேர்வை சந்திக்க தயாராக வேண்டிய சூழல் உள்ளது” எனவும் கூறியது மாணவர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேளாண் சட்டம்:

பாராளுமன்ற இரு அவைகளிலும், நிறைவேற்றப் பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என, திமுக கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு உள்ளது. வேளாண் சட்டங்களை கண்டிப்பாக திரும்பப் பெற முடியாது, என மத்திய அரசு, ஏற்கனவே  திட்டவட்டமாக அறிவித்தது, நமக்கு நன்கு நினைவில் இருக்கும்.

புதிய கல்விக் கொள்கை:

பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய கல்விக் கொள்கையை, திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை மனுவில், திமுக குறிப்பிட்டு உள்ளது. நிறைய கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக நலன் ஆர்வலர்கள் என பலரும், புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டு அதை நடைமுறைப் படுத்த வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு, அதை செயல்படுத்த முனைந்து வருகின்றது.

இலங்கைத் தமிழர்:

ஈழத் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என திமுக தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு உள்ளது. ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக, கொல்லப் பட்ட போது, அவர்களுக்காக பாராளுமன்ற அவைகளில் எந்தவித இரங்கலும் தெரிவிக்கப் படவில்லை எனவும், ஈழத் தமிழர்களை கொன்ற இலங்கைக்கு பாராளுமன்ற  அவைகளில் எவ்வித கண்டனமும் தெரிவிக்கப் படவில்லை எனவும், அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திரு மைத்ரேயன் அவர்கள், தனது கடைசி உரையில், பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்.

பல வருடங்களாக, மத்தியில் திமுக ஆட்சியில் இருந்த போது ஈழத் தமிழர்களுக்கு, சம உரிமை பெற்றுத் தராமல், தற்போது மட்டும் பேசுவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு:

பாஜக தன்னுடைய கட்சியில், பெண்களுக்கு பல பதவிகளை வழங்கி வருகின்றது. ஆனால், திமுக பெண்களுக்கு தன்னுடைய கட்சியில், பிரதான பதவிகளை வழங்காமல், அமைச்சரவையிலும்  பெண்களுக்கு சமபங்கு அளிக்காமல், மத்திய அரசை சட்டம் இயற்ற கேட்பது, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரதமருடனான சந்திப்பிற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த, முதல்வர் ஸ்டாலின் அவர்கள், “பிரதமரை சந்தித்தது மன நிறைவாக இருந்தது எனவும், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி மொழி வழங்கி உள்ளார் எனவும், எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், எந்த நேரத்திலும், என்னுடன் தொடர்பு கொள்ளலாம் என்பதை, வெளிப்படையாகவே பிரதமர் எங்களிடத்தில் தெரிவித்தார்” எனவும் கூறினார்.

புதிதாக பொறுப்பேற்று உள்ள மாநில அரசு, மத்திய அரசுடன் இணைந்து, தமிழகத்திற்கு தேவையான அனைத்து விதமான நலன்களையும் பெற்று, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். தமிழர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டு செயல்பட்டு வரும் பிரதமர் அவர்கள், நிச்சயமாக தமிழகத்திற்கு நன்மைகள் பல செய்ய தயாராக இருப்பார்…

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.!

நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே..!!

                                       –     .ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

மூலம்:

https://twitter.com/EPSTamilNadu/status/1400444834586906627

https://www.dinamalar.com/news_detail.asp?id=2787669h https://www.facebook.com/polimernews/photos/a.390570347728501/4125481244237374