சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ.க சார்பில் 4 எம்.எல்.ஏ.க்கள் அவைக்குள் நுழைந்திருக்கிறார்கள். திருநெல்வேலி தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்புக்காக சென்னை வந்திருந்த அவரை, சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்:
திருநெல்வேலி தொகுதி பேரவை உறுப்பினராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்களே?
தேர்தலில் போட்டியிட எனக்கு கட்சித் தலைவர்கள் வாய்ப்பளித்தனர். அவர்களது நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் என்னை மூன்றாவது முறையாக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தது எனது உயிரின் மேலான திருநெல்வேலி தொகுதி வாக்காளப் பெருமக்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது அரசியல் பயணம் அதிமுகவில் தொடங்கி பாஜகவில் நிலை கொண்டிருக்கிறது. உங்கள் அரசியல் வாழ்விற்கு அடித்தளம் என்ன?
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கம், அஇஅதிமுக. அவருடைய மறைவுக்குப் பின்னும் வலுவாக நீடிக்கிறது. இன்றளவும் 66 பேரவை உறுப்பினர்களைப் பெற்று இருக்கிறது என்றால் அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை. ஜெயலலிதாதான், 2001ல் என்னை முதன்முதலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், போக்குவரத்து, மின்சாரம், தொழில்துறை அமைச்சராகவும் அரசியலில் நிலைப்படுத்தினார் அன்று தொடங்கி இறுதிவரை அவரோடு இணைந்து பணியாற்றியது எனது பாக்கியம். அவர் ஒரு இரும்புப் பெண்மணி என்றுதான் சொல்ல வேண்டும். அவரால் வார்க்கப்பட்டவன் நான். இந்நேரத்தில் அவரை நன்றியோடு நினைவு கூர்வதில் பெருமை அடைகிறேன். அவரைப் போன்ற மாபெரும் சக்தி இன்று தமிழகத்தில் இல்லை என்பதால் தான் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பது உண்மை.
பா.ஜ.க பேரவைக் கட்சித் தலைவராக அ.தி.மு.க உடனான உங்கள் உறவு எப்படி இருக்கும்?
சுமூகமாக இருக்கும். அ.திமு.க.வும் பா.ஜ.க.வும் இன்னமும் கூட்டணியில் தான் இருக்கின்றன. அது தொடர்ந்து நீடிக்கும். சட்டப்பேரவையிலும் நாங்கள் சேர்ந்தே குரல் கொடுப்போம்.
பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் நால்வரின் வெற்றியை எவ்வாறு அணுகுகிறீர்கள்?
தி.மு.க. தலைவர் அவரது தேர்தல் பரப்புரையின் போது ‘எக்காரணத்தைக் கொண்டும் தாமரையிடம் சூரியன் தோற்கக்கூடாது’ என்று பேசியிருந்தார். ஆனால் தாமரை மலர்ந்திருக்கும் நான்கு இடங்களில் திருநெல்வேலி, நாகர்கோவில், மொடக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களிலும் சூரியன் நேரடியாகத் தாமரையிடம் தான் தோற்றிருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் திமுகவின் தோழமைக் கட்சி போட்டி போட்டால்கூட, மறைமுக திமுகவும் போட்டி போட்டது. அந்த இருவரையும் எதிர்த்துதான் தாமரை வென்றிருக்கிறது. பா.ஜ.க.வுக்கு இது மகத்தான வெற்றி.
திருநெல்வேலி தொகுதி மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நீங்கள் செய்யப்போவது என்ன?
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக 2001ல் தேர்வானபோது ரூ.76 கோடி, 2011-ல் தேர்வானபோது ரூ.56 கோடி நிதி ஒதுக்கி தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தினேன். இன்னும் சில இடங்களில் குடிநீர்ப் பிரச்சினை நீடிக்கிறது. அதையும் தீர்க்கப் பாடுபடுவேன்.
திருநெல்வேலி நகரை மேம்படுத்த என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்?
திருநெல்வேலி பொலிவுறு நகரமாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி முழுவதும் சீரமைப்புப் பணிகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அந்தப்பணிகளை துரிதப்படுத்த முயற்சி செய்கிறேன். தாமிர பரணியில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறேன். இன்னும் மக்களுடைய அடிப்படைத்தேவைகள் எதுவாக இருந்தாலும், அரசை அணுகி கண்டிப்பாக அவற்றைச் செய்து கொடுப்பேன்.
தென்தமிழகத்தின் முக்கிய தலைவரான நீங்கள், அந்தப் பகுதிக்குத் தரும் வாக்குறுதி என்ன?
தென்தமிழகத்தைப் பொறுத்தவரையில் நிறைய தொழிற்சாலைகள் தேவைப்படுகின்றன. ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது கங்கை கொண்டான் சிப்காட்டில் கோகோ கோலா, ஏடிஆர் டயர் கம்பெனி, நோவா கார் கம்பெனி, எல்காட் போன்ற பல தொழிற்சாலைகளைக் கொண்டு வர முயற்சி எடுத்தேன். இனியும் அங்கு வேறு என்னென்ன தொழிற்சாலைகள் வரமுடியும் என்று ஆலோசித்து அரசாங்கத்தை அணுகி அதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன்.
புதிய அரசின் செயல்பாடுகள் பற்றி?
புதிய அரசின் செயல் பாடுகளை விமர்சிக்க கால அவகாசம் இருக்கிறது. அதே நேரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை மூலமாக கோயில் வழிபாட்டு உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் கொள்கை. அரசு ஆலயத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்பதை நிச்சயம் பேரவையில் வலியுறுத்துவோம்.
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தமிழக மக்களுக்கு மத்திய அரசு உதவி செய்யுமா?
புதிதாகப் பதவியேற்ற தமிழக அரசு 470 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கேட்டவுடன் மத்திய அரசு 419 டன் ஒதுக்கீடு செய்து தமிழகத்திற்கு அனுப்பியது. இன்னும் எந்த உதவியாக இருந்தாலும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. மாநில அரசு எடுக்கும் உரிய நடவடிக்கைகளுக்குத் தமிழக மக்களாகிய நாம் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.