ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில் சர்வதேச யோகா தினமாக ஆண்டின் ஒரு நாளை ஐ.நா சபை அறிவிக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியிருந்தார். மேலும், ஜூன் 21ம் தேதியை இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். அமெரிக்கா, கனடா போன்ற பல உலக நாடுகள் அவரின் பரிந்துரையை ஆதரித்தது. அதன்படி, 2014 டிசம்பர் 11அன்று ஐ.நா பொதுச்சபை ஜுன் 21ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
ஏன் ஜுன் 21?
பூமி சூரியனை சுற்றுவதில் உள்ள இரண்டு முக்கியக் கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் (ஊத்திராயணம்) மிக நீண்ட பகல் பொழுதாக உள்ளது .
முதல் சர்வதேச யோகா தினம்:
முதன்முறையாக 2015, ஜுன் 21ம் தேதி ‘சர்வதேச யோகா தினம்’ உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது. பாரதத் தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்.
யோகாவினால் நன்மைகள்:
உடலின் இசைவு, இணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது. தசைகளின் நலத்தையும் வலிமையையும் பாதுகாக்கிறது. சுவாசத்தை சீராக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. தேவைற்ற கொழுப்பை குறைக்கிறது. இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மனதுக்கு அமைதி அளிக்கிறது. உயிர் ஆற்றலை பெருக்குகிறது என பல்வேறு நன்மைகள் யோகா செய்வதால் நமக்குக் கிடைக்கின்றன.
யோகா செய்முறை:
யோகா செய்வதற்கு காலையும் மாலையும் உகந்தது. கண்டிப்பாக வெறும் தரையில் யோகா செய்யக்கூடாது. திறந்தவெளியைவிட காற்றோட்டமானா அறை சிறந்தது. தளர்வான பருத்தி ஆடைகள் நல்லது.
யாருக்கு தேவை யோகா?
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமல்ல யோகா. கடுமையாக உழைப்பவர்களுக்குக் கூட, உழைப்பின்போது உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீரான பயிற்சி கிடைப்பதில்லை. எனவே, அனைவருக்கும் உடலின் அனைத்து பாகங்களும் சீராக செயல்படவும், மனம் புத்துணர்ச்சியும் அமைதியும் பெறவும் யோகா தேவைப்படுகிறது.
வயது வரம்பு:
எந்த வயதிலும் யோகா பயிலலாம். வயதானவர்கள் தகுந்த ஆசிரியரின் வழி காட்டுதலுடன் மெதுவாக, சீராக, அவர்களால் இயன்ற அளவிற்கு மட்டும் செய்து வரவேண்டும். ‘இளைமையில் கல்’ என்பதற்கேற்ப யோகாவை இளைமையில் கற்று தினமும் செய்வதால் உடலும் மனமும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உணவுக் கட்டுப்பாடு:
யோகாவிற்கு விசேஷமான உணவுக் கட்டுபாடுகள் இல்லை. எனினும் உடல் நோய்வாய்பட்டவர்கள், யோகாவுடன் இணைந்து அதற்கென உள்ள உணவுமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும். அசைவ உணவு தவிர்த்தல், மிதமாக உப்பு, புளி, காரம் சேர்க்கப்பட்ட எளிமையாக எளிதில் ஜீரணமாகும் உணவு, புதிதாக சமைத்த உணவு, சிறுதானிய உணவு, காலத்திற்கேற்ற, இடத்திற்கேற்ற உணவு, தேங்காய்,பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை உணவுகள் அனைவருக்கும் ஏற்றது.
யோகா / யோகாதெரப்பி:
நம் உடலும் மனமும் எப்போதும் நன்றாக இருக்க நாம் தினசரி செய்யும் யோகபயிற்சி யோகாசனம். ஆனால் உடல் நோய்வாய்பட்டவர்கள், சில குறிப்பிட்ட உடல் மற்றும் மனப் பிரச்சனை உள்ளவர்களுக்கென விசேஷமான யோகா ஆசிரியர்களால் தொகுக்கப்பட்ட ஆசனங்களின் ‘பேக்கேஜ்’ தான் யோகாதெரபி. இதை எத்தனை நாள் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், எப்பொழுது அதில் மாற்றம் தேவை, எப்போது நிறுத்த வேண்டும் என்பது நோயாளியையும், நோயின் தன்மையையும் பொறுத்து யோகா ஆசிரியர் முடிவெடுப்பார்.
எது யோகா?
யோகாவில் இவ்வளவு தான் என துல்லியமாக எந்த எண்ணிக்கையும் கிடையாது. அமர்வது, நிற்பது, உறங்குவது எல்லாமே ஏதோ ஒரு யோக நிலைதான், கர்பத்தில் குழந்தை படுத்திருப்பதுகூட ஒரு யோகாதான். உடல்,மனம் நன்றாக இருக்க சரியான முறையில் உடலின் அனைத்து பாகங்களுக்குமான யோகாவை பழகி தினமும் செய்து வருவது அவசியம்.
சில குறிப்புகள்:
யோகாவை வேகமாக செய்யக்கூடாது, நம் உடலை கஷ்டப்படுத்தாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டும் நிறுத்தி நிதானமாக அனுபவித்து செய்ய வேண்டும். ஒரு கயிற்றை ஒரே பக்கமாக முறுக்கினால் நாளடைவில் அது தளர்ந்துவிடும். அதுபோல ஒரே பக்கமாக யோகாவை செய்தால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய அதன் எதிர்புற யோகாவை (counter yoga) செய்ய வேண்டும். அப்போதுதான் உடல் சமநிலையை அடையும். ஆரம்பத்தில் குறைந்த நேரமும், பழக பழக நேரத்தை மெதுவாகக் கூட்டலாம். நம் உடல்தான் இதற்கு சரியான அளவுகோல், எப்பொழுது நம் உடல் சோர்வடைகிறதோ அப்போது உடனே நிறுத்திவிட வேண்டும்.
வாழ்க்கையோடு ஒன்றிய யோகா:
மற்றவரை வணங்கினால் அது பிராணாயாமம். நேராக நின்றால் தாடாசனம். ஒற்றைக்காலில் நின்றால் விருஷாசனம். நாற்காலியில் அமர்ந்தால் உத்கடாசனம். தரையில் அமர்ந்தால் சுகாசனம். மண்டியிட்டு அமர்ந்தால் வஜ்ராசனம். முதுகுப்புறம் படுத்தால் சவாசனம். குப்புற படுத்தால் மகராசனம். பலனை எதிர்பாராமல் கடமையை மட்டும் செய்தால் கர்மயோகா. படித்தல் சிந்தித்தல் என்பது ஞானயோகா. பூஜை செய்தால் பக்தியோகா. மனதை கட்டுப்படுத்தினால் ராஜயோகா.
யோகா என்பது உடலை வளைப்பதோ, உடலை முறுக்குவதோ அல்ல. அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் யோகாவே. யோகா என்பது நம் வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதே உண்மை.
கோ. பழனிவேல்