தேசத்துரோக வழக்கில் முன்ஜாமீன் பெற்றார் நடிகை ஆயிஷா சுல்தானா

லட்சத்தீவு விவகாரம் குறித்து, கேரளா தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில்,  நடிகை ஆயிஷா சுல்தானா பங்கேற்று பேசினார்.

“கொரோனா வைரஸை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக, உயிரி ஆயுதமாக (Bio – weapon), மத்திய அரசு பயன்படுத்துகிறது” என்ற கருத்தைத்  தொலைக்காட்சி விவாதத்தின் போது ஆயிஷா சுல்தானா கூறினார்.

தொலைக்காட்சி விவாதத்தின் போது, லட்சத்தீவில் வைரஸ் பரவுவது குறித்து, ஆயிஷா சுல்தானா தவறான செய்திகளை பரப்பியதாக, பாஜகவின் லட்சத்தீவு பிரிவு தலைவர், அப்துல் காதர் கவரட்டி போலீசில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கில், கவரட்டி போலீசில், ஜுன் 20 அன்று ஆஜராகுமாறு கவரட்டி போலீசார், ஆயிஷா சுல்தானாவிற்கு நோட்டீஸ் அனுப்பினர்.

மூத்த வழக்கறிஞர் விஜயபானு மூலம் ஆயிஷா சுல்தானா, முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதில், “தனக்கு ஒரு போதும் மத்திய அரசுக்கு எதிராக அதிருப்தியையும், வெறுப்பையும் தூண்டும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்தார். வழக்கறிஞர் விஜயபானு வாதிடுகையில், “அரசுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்துவது தேசத்துரோக வழக்கு ஆகாது” என வாதிட்டார்.

ஆயிஷா சுல்தானாவிற்கு,  முன்ஜாமீன் வழங்கக் கூடாது என  வழக்கறிஞர் மனு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதிடுகையில், நடிகை ஆயிஷா சுல்தானாவின் கருத்துக்கள் மிகவும் அபாயகரமானது என்றும், பிரிவினைவாதத்தை தூண்டுவது போல உள்ளது எனவும், இது போன்ற பிரபல நடிகையின் தவறான கருத்துகளால், பள்ளி செல்லும் மாணவர்கள் மத்தியில், சமூகத்தைப் பற்றி தவறான வழிகாட்டுதலும், தவறான புரிதலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும்,  அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிட்டார்.

கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அசோக் மேனன் அவர்கள், “எப்போது அழைத்தாலும்  விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஒரு வாரத்திற்கு, ஆயிஷா சுல்தானாவிற்கு , ஜூன் 17-ஆம் தேதி, வியாழன் அன்று, முன் ஜாமீன் வழங்கினார்.

 https://www.livelaw.in/top-stories/aisha-sultana-gets-interim-anticipatory-bail-from-kerala-high-court-in-sedition-case-175852#.YMtLjVHE0b8.whatsapp