சுகாதாரப் பணியாளர்கள் சுட்டுக்கொலை

ஆப்கனின் நங்கர்ஹர் மாகாணம் கோக்யானி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். சுர்க்ரோட் மாவட்டத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஜலாலாபாத்தில் 3 பணியாளர்கள் காயமடைந்தனர். வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த திட்டமிட்ட தாக்குதல்கள் தலிபான்களின் சதி என காவல்துறை கூறுகிறது. ஆனால் இத்தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்க மறுத்துவிட்டது. இதனால், அங்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பும் ஜலாலாபாத்தில் 3 பெண் மருத்துவ பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தாக்குதல்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை தரவும் அங்கு வழிமுறைகள் இல்லை, மேலும் அங்குள்ள தலிபான்களும் மதத் தலைவர்களும், கருத்தடை, தடுப்பூசி என அனைத்தும் மேற்கத்திய சதி என பழமைவாத கருத்துகளுடன் இன்றும் உள்ளனர் என்பது அங்குள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு.