பாரதத்தில் கடந்த மே 25 முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்த விதிமுறைகளுக்கு உட்படுவதாக அனைத்து சமூக வலைதளங்கள் சம்மதம் தெரிவித்தன. ஆனால், டுவிட்டர் மட்டும் முரண்டுபிடித்தது. மத்திய அரசு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து கூடுதல் கால அவகாசம் கேட்டது டுவிட்டர் நிறுவனம். அவகாசம் வழங்கப்பட்டும் புதிய விதிகளை டுவிட்டர் இதுவரை ஏற்கவில்லை. இதனால், சமூகவலைதளங்களுக்கு பாரதத்தில் வழங்கப்பட்டு வரும் சட்டப் பாதுகாப்பை டுவிட்டர் இழந்துள்ளது. இதனால் பயனாளர்கள் பதிவிடும் சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு பயனர்கள் மட்டுமல்லாமல், இனி டுவிட்டரும் பொறுப்பாகிறது. சட்டரீதியிலான நடவடிக்கைகளை பயனர்களுடன் இணைந்து இனி டுவிட்டரும் சந்திக்க நேரிடும். இதனையடுத்து, உ.பி.,யில் முஸ்லிம் நபரை தாக்கப்படும் ஒரு போலி வீடியோவை டுவிட்டர் நிறுவனம் நீக்காததால், அந்நிறுவனத்தின் மீது உ.பி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க டுவிட்டர் நிர்வாகத்துக்கு பார்லிமென்ட் நிலைக்குழு, சம்மன் அனுப்பியுள்ளது.