பிஹாரில் காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 13 பேர் காங்கிரசில் இருந்து விலகி, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் (ஐ.ஜ.த) இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) தேசியத் தலைவர் ஆர்.சி.பி.சிங், ‘கடந்த காலத்தில் செய்த தவறுகளின் பலன்களை காங்கிரஸ் கட்சி இப்போது எதிர்கொண்டு வருகிறது. ஒரு குடும்பத்தினர் மட்டுமே கட்சிக்கு தலைமை வகிப்பது, கட்சியில் மற்றவர்கள் பணிக்கு உரிய மரியாதை கிடைக்காதது ஆகியவை பெரும் அதிருப்தியாக உருவெடுத்தது. மேலும் மக்கள் மத்தியிலும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துவிட்டது. தற்போது மூழ்கும் கப்பலாகிவிட்ட அக்கட்சியில் இருந்து பலர் வெளியே குதித்துத் தப்பி வருகின்றனர். இதை யாரும் தடுக்க முடியாது. ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத் போன்றவர்களும் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு மோசமாக தோல்வியடைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்’ என தெரிவித்தார்.