கர்த்தாவின்டே நாமத்தில்

சீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முலக்கல். இவர், கேரளாவில் உள்ள கான்வென்டில் தன்னை 2014 முதல் 2016 வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்று கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் சொன்னார். இது நாட்டையே உலுக்கினாலும் பிராங்கோ முலக்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவரை கைதுசெய்யக் கோரி கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தினர். வாடிகனுக்கு புகார் அனுப்பப்பட்ட நிலையில், பிராங்கோ தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். பிறகு ஜாமீனில் வெளியே வந்து வழக்கம்போல தன் பணியை செய்துகொண்டிருக்கிறார்.

மிரட்டலும் மர்ம மரணமும்:

இந்த வழக்கில் அவருக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா மர்மமான முறையில் இறந்தார். இதைத்தொடர்ந்து பிராங்கோவுக்கு எதிராக திருச்சபையிலும் போராட்டம் வெடித்தது. போராட்டம் செய்த 5 கன்னியாஸ்திரிகளில் அதனை முன்னின்று நடத்திய அனுபமா என்ற கன்னியாஸ்திரியை இடமாற்றம் செய்தது அந்த சபை. ‘பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் நானும் ஒரு சாட்சி. அவருக்கு எதிராக நான் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லச் சொல்லி எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். பாதுகாப்பற்ற நிலையில் நான் வாழ்கிறேன்’ என லூசியும் புகார் தெரிவித்திருந்தார்.

லூசியின் சுயசரிதை:

போராட்டக் களத்தில் உடனிருந்த கன்னியாஸ்திரி லூசி களப்புராவை 2019 மே மாதம் சபையை விட்டு நீக்கினர். அவரை அறையில் அடைத்து வைப்பது, உணவு, நீர் கொடுக்க மறுப்பு என தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதும் சபையில் இருந்து விலகாமல் போராட்டங்களை முன்னெடுத்தார். மேலும், சபையில் தனக்கு நேர்ந்தது, தான் கண்டது என அனைத்தையும் ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார் லூசி. மலையாள வார இதழ் ஒன்று, இதை தொடராகவும் வெளியிட்டது.

லூசி மீது புகார்:

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சீரோ மலபார் திருச்சபை நிர்வாகம், சபையின் அனுமதியின்றி லூசி புத்தகம் வெளியிடுகிறார், வங்கிக் கடன் பெற்று கார் வாங்கியுள்ளார், ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார், சபை கட்டுப்பாட்டை மீறி கன்னியாஸ்திரி உடையின்றி சாதாரண உடையில் முகநூலில் படம் போடுகிறார் என லூசி மீது உப்பு சப்பில்லாத புகார்களை பட்டியலிட்டது.

வாடிகனின் நீதி:

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக இருந்த ஐந்து கன்னியாஸ்திரிகளில் ஒருவரான சகோதரி லூசி கலாபுரா வாடிகனுக்கு இது குறித்து விசாரிக்க எழுதிய வேண்டுகோள் கடிதத்தை எவ்வித நேரடி விசாரணையும் இன்றி வாட்டிகன் தற்போது நிராகரித்துள்ளது. இதையடுத்து தற்போது சர்ச்சிலிருந்து லூசி நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால், ஆரம்பம் முதலே பாதிரி பிராங்கோ முலாக்கலுக்கு ஆதரவாகவே வாடிகன் செயல்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது.

என்ன சொல்கிறார் லூசி?

வாடிகனின் இந்த முடிவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள லூசி, ‘எவ்வித விசாரணையும் இன்றி வாடிகன் என்னை நீக்கியது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் உண்மையை உலகுக்கு சொல்லப்போகிறேன். நான் இங்கேதான் தங்குவேன். இது எப்படி நடக்கப்போகிறது என எனக்குத் தெரியாது’ என கூறினார். அவருக்கு ஆதரவாக உள்ள ‘அசோசியேஷன் ஆப் கன்சர்ன்ட் கத்தோலிக்ஸ்’ அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஏ எம் சோதா, ‘இதுதான் கிறித்துவம் என்பதா? சகோதரி லூசியின் நீக்கம் குறித்து சுப்பீரியர் ஜெனரல்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபைக்கு இது ஒரு சோகமான நாள்’என்று கூறினார்,

இது தொடர்கதைதான்:

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ சபைகளில் இது போன்ற பாலியல் சீண்டல்கள் ஒரு அன்றாட நிகழ்வாகவே உள்ளது. சிறுமிகள், சிறுவர்கள், ஜபத்திற்கு வரும் பெண்கள், கன்னியாஸ்திரிகள், அனாதை இல்லக் குழந்தைகள் என இதனால் பாதிக்கப்பட்டோர் ஏராளம். ஆனால், மிரட்டல், அழுத்தம், சரிகட்டுதல், வெளிப்படைத் தன்மையற்ற விசாரணை போன்ற காரணங்களால், இது குறித்து வெளியே வரும் புகார்கள் மிக மிக சொற்பமே. முன்னதாக, 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து சபையில் இருந்து விலகிய ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி, ‘ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு’ என்ற பெயரில் சபைக்குள் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.