அயோத்தி நில விவகாரம்

சுல்தான் அன்சாரி என்ற வியாபாரியும், ரவி மோகன் திவாரி என்ற வியாபாரியும் அயோத்தியில் ரூ. 2 கோடி தந்து விலைக்கு வாங்கியுள்ளனர் அதை அன்றே 18.5 கோடிக்கு அயோத்தி ராமர் ஆலய அறக்கட்டளைக்கு விற்றுள்ளனர். எனவே, அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயத்துக்கு நிலம் வாங்குவதில் 16.5 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் பவன் பாண்டேயும், ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கும் செய்தியாளர் கூட்ட புகார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டு மறுப்பு:

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவருமான சம்பத் ராய் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,

விரிவாக்கம்:

‘அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கி வருகிறோம். போக்குவரத்து எளிதாக இருப்பதற்காக, கோவில் வளாகத்தை சுற்றியுள்ள நிலம் தேவைப்பட்டது. அதற்காக வீடுகளும், சிறு கோயில்களுமாக இருந்த அந்த நிலத்தை வாங்கினோம். அங்கு வசித்தவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்காக, அயோத்தியில் பாக் பிஜைசி என்ற இடத்தில் உள்ள 12 ஆயிரத்து 80 சதுர மீட்டர் நிலத்தை அறக்கட்டளை வாங்கியது.

2017ல் விற்கப்பட்டது:

அந்த நிலத்துக்கு ரூ. 2 கோடியே 16 லட்சம் விலை என்ற அடிப்படையில், 2017ம் ஆண்டு முதல்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. முன்பணமாக ரூ. 92 லட்சம் கொடுக்கப்பட்டு இருந்தது. அது, 2017-ம் ஆண்டின் சந்தை விலை அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலை என்பதால் குறைவாக இருந்தது. அப்போது, ஸ்ரீராமர் கோயில் கட்டும் தீர்ப்பு வரவில்லை. தீர்ப்பு வெளியான பிறகு நிலத்தின் மதிப்பு 10 மடங்கு கூடிவிட்டது. அதனால்தான், கடந்த மார்ச்சில் அந்த நிலத்தை அறக்கட்டளை வாங்கியபோது, விலை 9 மடங்கு அதிகரித்து இருந்தது.

தேர்தல் ஆதாயம்:

நிலத்தின் உரிமையாளர்கள் 2017ல் வாங்கியவர்களுக்கு கடந்த மார்ச்சில்தான் பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். அடுத்த சிறிது நேரத்தில், ராமர் கோவில் அறக்கட்டளைக்கு நிலம் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், சந்தை விலையை விட குறைவாகத்தான் அதை வாங்கி இருக்கிறோம். எனவே, நிலம் வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. புகார் தெரிவித்த இரண்டு பேரும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். அடுத்த ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடடைபெற உள்ளது.  தங்கள் அரசியல் லாபத்துக்காக அவர்கள் இந்த விற்பனை குறித்து பொய் குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்’ என கூறியுள்ளார்.

உள்நோக்கம்:

இந்த குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ராமஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார். அயோத்தி மாவட்ட கலெக்டர் அனுஜ்குமார் ஜா, ‘‘ராமர் கோயில் அறக்கட்டளை வாங்கியுள்ள நிலம் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. அங்கு அயோத்தி ரயில் நிலையத்துக்கான முக்கிய நுழைவாயில் கட்டப்பட உள்ளது. அதன்பிறகு அந்த இடம் பெரிய வணிக தலமாக மாறிவிடும்’’ என்றார். இந்த புகார் பொய் எனத்தெரிந்தால் புகார் எழுப்பியவர்களிடம் ரூ.50 கோடி இழப்பீடு வசூலிக்க வேண்டும் என பல்வேறு மடங்களின் தலைவர்கள் கூறி உள்ளனர்.

முதல்வர் உத்தரவு:

ராமர் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் அறிக்கை அளிக்க ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.