ஜான்சன் & ஜான்சனுக்கு பின்னடைவு

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (எப்.டி.ஏ) ஜான்சன் & ஜான்சனின் அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் ஆலையில் தயாரிக்கப்பட்ட 60 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டது. இதனுடன் சேர்த்து ஜான்சன் & ஜான்சனின் நிராகரிக்கப்பட்ட மொத்த கொரோனா தடுப்பு மருந்துகள் அளவுகளின் எண்ணிக்கை 75 மில்லியனாக உயர்ந்தது. இம்மருந்தை உற்பத்தி செய்த  எமர்ஜென்ட் பயோ சொல்யூஷன்ஸின் பால்டிமோர் ஆலையில் மருந்துகளில் மாசு ஏற்படுத்தக்கூடிய ஆதாரங்களை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் கண்டறிந்தனர். அதனால், அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் 100 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகளின் தலைவிதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 21 மில்லியன் டோஸ் நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டது. ஜான்சன் & ஜான்சனின் கொரோனா தடுப்பூசி போடுவதால் ஏற்படும் இரத்த உறைவு கோளாறுக்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாகவும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. முன்னதாக, இரண்டு டோஸ்கள் தேவைப்படும் மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஒற்றை டோட் தடுப்பூசி நம்பிக்கைக்குரியதாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.