இந்தியா ஸ்வீடன் பாதுகாப்பு தொழிற்துறை கூட்டமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார் அப்போது இந்திய தயாரிப்புகள் உலகளாவிய தரத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம், உத்தர பிரதேச மாநிலங்களில் அமையவிருக்கும் பாதுகாப்பு முனையங்களில் ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், பாதுகாப்பு துறையில் தனிப்பட்ட முறையில் 75 சதவீகிதமும் அரசு வழியாக 100 சதவிகிதமும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கருத்தரங்கின் முடிவில் இந்திய பாதுகாப்பு தயாரிப்பாளர்கள் சம்மேளனம் மற்றும் சுவீடன் பாதுகாப்பு மற்றும் ராணுவ தொழில்துறை கூட்டமைப்பு இடையே, இருதரப்பு பாதுகாப்பு தயாரிப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒர் ஒருங்கிணைந்த குழுவை அமைத்து எதிர்கால திட்டங்களை அடையாளம் காண ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், தற்போது இந்தியா தனது விமானப்படையில் உள்ள பழைய விமானங்களுக்கு மாற்றாக புதிய 114 விமானங்களை வாங்க முயற்சித்து வருகிறது. இதற்கு ஸ்வீடனின் சாப் நிறுவனம் தனது கிரிப்பன் இ விமானத்தை 100% தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் வழங்க முன்வந்துள்ளது. கிரிப்பன் தவிர்த்து பிரான்சின் ரபேல், ரஷ்யாவின் மிக்-35 மற்றும் சுகாய்-35 மற்றும் யுரோபைட்டர் டைபூன் ஆகிய விமானங்களும் போட்டியில் உள்ளன.