கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆக்ஸிஜன் தேவையை சமாளிக்க, மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர் பயன்பாட்டுடன் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வர்த்தக விலை உச்ச வரம்பிற்கான நெறிமுறைகளை தேசிய மருந்து விலை ஆணையம் அறிவித்தது. இந்த விலை சீரமைப்பு மூலம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நியாயமற்ற லாப வரம்பை குறைத்தது. இதனையடுத்து 104 தயாரிப்பு நிறுவனங்களும் 252 பிராண்டுகளின் இறக்குமதியாளர்களும் அதிகபட்ச சில்லரை விலையை மாற்றியமைத்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். இவற்றில் 70 தயாரிப்புகள் மற்றும் பிராண்டின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது. 58 பிராண்டுகள் 25 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளன. 11 பிராண்டுகள் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளன. 18 உள்நாட்டு நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை. ‘மாற்றியமைக்கப்பட்ட விலை கடந்த 9ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தகவல்கள் மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுடன் பகிரப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன’ என, ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.