தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருப்பினும் சராசரியாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இருந்து வருகின்றன. எனவே, கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஜூன் 21 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. அந்தத் தளர்வுகளில் ஒன்றாக, தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது, கொரோனா சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அன்றைய எதிர்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட தி.மு.கவினரும் அவர்களது கூட்டணிக் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். ‘ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு’ என ஒரு கையில் தட்டி மறு கையில் கறுப்புக்கொடி என ஸ்டாலின் நின்றார். ஆனால், அதே ஸ்டாலின் தலைமையிலான அரசு, தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை திறக்கிறது. இதற்கு பா.ஜ.க, பா.ம.க, பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்பு பெருகியுள்ளது. மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது தயாரிப்புத் தொழிற்சாலைகள், மதுக்கூடங்களை மூடுவோம் என கூறிய கனிமொழி, தற்போது தன் அண்ணனிடம் அதை செய்ய சொல்லி கேட்பாரா என்றும் கேட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியின் போது டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக குடியை கெடுக்கும் அ.தி.மு.க மற்றும் குடிகெடுக்கும் எடப்பாடி உள்ளிட்ட ஹேஷ்டேக்குள் டிரெண்ட் செய்யப்பட்டன. அதே போன்று, தற்போது, குடிகெடுக்கும் ஸ்டாலின், குடியை கெடுக்கும் தி.மு.க உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.