வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தின் மால்டா பகுதிக்குள் சீனாவைச் சேர்ந்த நபர் ஊடுருவ முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். 35 வயதான அந்த நபர், தனது பெயர் ஹான் ஜுன்வே எனவும், சீனாவின் ஹூபேயில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டில் அவர் ஜூன் 2ஆம் தேதி வங்கதேசத்திற்கு வந்ததும் 10ஆம் தேதி பாரத எல்லைக்குள் ஊடுருவ முயன்றதும் தெரியவந்தது. அவர் இதற்கு முன்பாக 2010ல் ஹைதராபாத் ஒருமுறை, 2019க்குப் பிறகு மூன்றுமுறை குருகிராம், டெல்லி என மொத்தம் நான்குமுறை பாரதம் வந்துள்ளார். அவரது தொழில் கூட்டாளி, லக்னோவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பாரதத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு விசா கிடைக்கவில்லை. எனவே, அவர் வங்கதேசம் வழியாக பாரதத்திற்குள் ஊடுருவ முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் இருந்த மின்னணு கருவி பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சீன உளவாளியாக இருக்கலாம் எனவும் சந்தேகிப்பதால் அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.