தனியார் பார்களைத் திறக்க அரசு முடிவா?

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக தமிழகம் முழுவதும் தனியார் பார்களை அதிக எண்ணிக்கையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்பட முனைவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் புள்ளிவிவரங்களின்படி 5,198 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் 2,050 மதுக்கடைகளுடன் பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து மதுக்கடைகளிலும் அதிகாரபூர்வமற்ற வகையில் பார்கள் செயல்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆளுங்கட்சி புள்ளிகளால் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் முடிவு ஆபத்தானது. தமிழகத்தில் ஏழைக் குடும்பங்களின் வீழ்ச்சிக்கும், பல பெண்கள் கைம்பெண்களாக வாடுவதற்கும் காரணம் மதுக்கடைகள்தான். பா.ம.க கடந்த 40 ஆண்டுகளாக இதனை எதிர்த்து போராடி வருகிறது. தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை ரத்து செய்த கட்சியான தி.மு.க, கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது. அதை மீறுவது மன்னிக்க முடியாத குற்றம். அதை அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது. தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். இதனால், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நிம்மதியாக நடமாட முடியாத சூழல் உருவாகும். இதை உணர்ந்து தமிழகத்தில் தனியார் பார்களைத் திறக்கும் திட்டத்தை தி.மு.க அரசு கைவிட வேண்டும். ஏற்கெனவே அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.