ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ், ‘வடபழநி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான 5.52 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டது, கோயில் நிலங்கள் மீட்கப்படும் என அமைச்சர் கூறியதும் அதேசமயம், அறநிலையத்துறைக்கு சில விஷயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறோம். கோயில் நிதி, விழாக்கள், பூஜைகள் போன்றவை அரசின் அதிகாரத்தின் கீழ் வராது. கோயில் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, ஆகம முறைப்படி, அறங்காவலர்கள் அதிகாரத்தின் கீழ் வரும். கோயில் நிலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது, அறங்காவலர் அதிகாரத்தின் கீழ் வரும். இதில், அரசு ஒரு பொதுவான வழிகாட்டுதலை தரமுடியும். கோயில் ஆக்கிரமிப்பு குறித்து அறங்காவலர் முறையிட்டால், அவற்றை நீக்க வேண்டியது இணை கமிஷனரின் கடமை. அதற்கு, சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தக்கார் முறையிட்டும் செய்ய வில்லை; தற்போது செய்திருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக மீட்கப்பட்ட கோயில் நிலங்களுக்கான பழைய வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோயில்களுக்கு நஷ்டம். சட்டப்பிரிவு, ’79- -சியின்படி, ஜப்தி நடவடிக்கை மூலம் வாடகை, குத்தகையை வட்டியுடன் வசூலிக்க வேண்டும். செய்யத் தவறும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீட்கப்பட்ட மதிப்புமிக்க இடங்களுக்கு, அந்த இடத்தின் தன்மைக்கேற்ப வங்கி உத்தரவாதத்துடன் ஹிந்து அமைப்புகளுக்கு வாடகை அல்லது குத்தகை விட்டு அங்கே அங்கே ஹிந்து பள்ளிகள், தொழிற்கல்வி நிலையங்கள் , ஹிந்து மருத்துவமனைகளை நடத்த வழிவகை செய்யலாம். கோயிலின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள், பல நூறு கோடி ரூபாய் வாடகை பாக்கி வரவேண்டி உள்ளது. அதனையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்திய சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு, அரசு கோயில் நிலங்களை மீட்க உறுதுணையாக உள்ளது. அதனைப் பின்பற்றி, அரசு செயலாற்றினாலே போதும்; கோயில்கள் மீண்டும் செழிக்கும். இதனால், ஒரு இலட்சம் ஹிந்துக்களுக்கு நல்ல சம்பளத்துடன் தமிழகம் எங்கும் வேலை வழங்கலாம். இதனால் அரசுக்கு நற்பெயர் கிட்டும்’ என தெரிவித்துள்ளார்.