சமூக வலைத்தளங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியதாக ஒரு கடிதம் தற்போது பரப்பப்பட்டு வருகிறது. அந்த கடிதம் ஜூன் 4 தேதியிட்டு வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. அந்த கடிதத்தில் அமித் ஷா, கொரோனா தொற்றின் 2ம் அலையைக் கையாண்டமுறை குறித்து உ.பி முதல்வரைப் பாராட்டியும் உ.பியின் மேற்கு பக்கம் இன்னும் அதிகம் பேருக்குத் தடுப்பூசியைச் செலுத்தவும் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022ல் நடைபெற உள்ள உ.பி தேர்தலில் வெற்றிபெற இது உதவும் என்ற வகையில் செய்தி உள்ளது. ‘மத்திய உள்துறை அமைச்சர் அதுபோன்ற ஒரு கடிதத்தை எழுதவில்லை, அது போலியானது. மக்கள் இதுபோன்று போலி செய்திகளை நம்பவேண்டாம். இது போன்று வரும் செய்திகளை அரசாங்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் சரிபார்க்க வேண்டும்’ என மத்திய அரசு டுவிட்டரில் செய்தியை வெளியிட்டுள்ளது.