தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு வாரங்களுக்குள் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இருக்கும் 121 நூலகங்களிலும் ஜுன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை முரசொலி நாளிதழை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள நூலகங்களிலும், ஆண்டு சந்தா செலுத்தி தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி மற்றும் தி.மு.க ஆதரவு ஏடுகளான தினகரன், குங்குமம், தமிழ் முரசு ஆகிய பத்திரிகைகளை மட்டும் வாங்கவும், அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நூலகங்களில் வாங்கப்படும் வார இதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள், செய்தித்தாள்கள் அதற்கான சந்தா, விளம்பரம் ஆகியவற்றில் தமிழக அரசு எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது. தமிழக அரசு இது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் இப்படி ஒருதலைபட்சமாக அறிவிப்பு வெளியிட காரணமாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் இது குறித்து சிந்திப்பாரா?