உத்தரபிரதேசத்தில் துணை நிலை மாஜிஸ்திரேட்டுகளாக பணியாற்றிய ராம்ஜீத் மௌரியா மிர்சாபூரில் பணி செய்தபோது ஒரு நில வழக்கில் சட்டங்களை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இதேபோல, ஸ்ராவஸ்தி ஜே.பி. சவுகான், பிலிபிட்டில் பணி செய்தபோது, ஒரு நில வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அஜய் குமார், கிரேட்டர் நொய்டாவில் முறைகேட்டில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீதான ஊழல் புகார்களை அடுத்து, மாநில அரசு ஒரு விசாரணை குழுவை அமைத்தது. விசாரணையில், அவர்கள் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது. இதனால், உ.பி அரசு, அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை தாசில்தாராக தரமிறக்கியதுடன் அவர்களுக்கு இரண்டு ஊதிய உயர்வுகளையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் எந்த ஊழலையும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று முன்பே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.