கடந்த மே 15 அன்று, 3.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டரை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால், எந்த தடுப்பூசி நிறுவனமும் தமிழக அரசின் டெண்டரை மதித்து அதற்கான விலைப்புள்ளிகளை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இதனால், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (டி.என்.எம்.எஸ்.சி) டெண்டர் தேதியை மேலும் நீட்டிக்கலாமா வேண்டாமா என யோசித்து வருகிறது. முன்னதாக, இதேபோல பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில அரசுகள் ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் டெண்டர் கோரிக்கை விடுத்தன. ஆனால், அந்த நிறுவனங்கள், நாங்கள் நேரடியாக மத்திய அரசுடன்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தெரிவித்து கதவடைத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.