சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை வாங்கிய முதல் ஒரு சில நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று.இந்த தடுப்பூசிகளை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தியுள்ள போதிலும், அங்கு கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பஹ்ரைன், தங்கள் நாட்டில் உள்ள 50 வயதிற்கு மேற்பட்ட மற்றும் நீண்டகால நோய்களைக் கொண்டவர்கள், ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் எஸ்.இ தடுப்பூசி பூஸ்டர்களை போட்டுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அந்த நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிகள்தான்.
பஹ்ரைனில் மட்டுமல்ல, செர்பியாவிலும் சினோபார்ம் தடுப்பூசி சோதனைகள் திருப்திகரமான முடிவுகளைத் தரவில்லை. செர்பியாவில் நடந்த ஒரு சோதனையில், பங்கேற்ற 150 பேரில் 29 சதவீதத்தினர் உடலில் மூன்று மாதங்களுக்குப் பிறகும் வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகள் பூஜ்ஜியம் என்ற அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஜர்னல் ஆய்வு முடிவுகளின்படி, சினோபார்ம் தடுப்பூசியின் செயல்திறன் 78 சதவீத்மாக மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சினோபார்ம் தடுப்பூசியை நன்கொடையாக பெற்றதால் சிறிய தீவு நாடான சீஷெல்ஸ், உலகின் அதிக தடுப்பூசி போட்ட நாடாக மாறியது. ஆயினும் அங்கு தற்போது கொரோனா மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதால், சீஷெல்ஸ் சுகாதார அமைச்சகம் தனது மக்களுக்கு மூன்றாவது பூஸ்டர் ஷாட் தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது.