அமெரிக்காவின் பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன், மாடர்னா ஆகிய மூன்று நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்துகளையும் அவற்றின் உரிமம் பெற்று பாரதத்திலேயே தயாரிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, ‘ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தை நமது நாட்டில் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் தயாரிக்க வெளியுறவு அமைச்சகம் அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. அதேபோல, அமெரிக்காவின் பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன், மாடர்னா ஆகியவற்றின் தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்வது, அந்நிறுவனங்களிடம் உரிமம் பெற்று பாரதத்திலேயே தடுப்பூசிகளை தயாரிப்பது குறித்தும் பேசி வருகிறோம்’ என மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். ‘இந்தாண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்காக 250 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து தயாரிப்பது தொடர்பாக பல மருந்து நிறுவனங்களுடன் பேச்சு நடக்கிறது’ என உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார்.