நாரதர் ஜெயந்தி விழா சென்னை தி.நகர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அரங்கில் ஜூன் 10ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.எஸ்.மகாதேவன், செய்திகளை விருப்பு வெறுப்பின்றி நேர்மறை, எதிர்மறை என இரண்டு பக்கங்களையும் அளித்தவர் நாரதர். அதனாலேயே நாரதர் பெயரில் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்குகிறது ஆர்.எஸ்.எஸ்.” என்றார்.நிகழ்ச்சியில், தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் ஜடாயு, மூத்த பத்திரிகையாளர் பத்மன், துக்ளக் சத்யா, மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் மீனாட்சி ஆகியோருக்கு அவர்களின் பணிகளைப் பாராட்டி நாரதர் விருதுகள் வழங்கப்பட்டன. ஜடாயு தனது ஏற்புரையில், ஹிந்துத்துவம் சார்பாக சில நண்பர்கள் இணைய உலகில் எழுதி வந்தோம். அதன் பிறகு தமிழ்ஹிந்து.காம் வலைதளத்தைத் தொடங்கினோம். இந்த நேரத்தில் என்னுடன் எழுதிவரும் மற்ற எழுத்தாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
துக்ளக் சத்யா பேசுகையில், நாரதர் போன்று பல கலகங்களின் மூலம் நாட்டுக்கு நன்மைகள் செய்தவர் எங்கள் ஆசிரியர் சோ” என்று புகழாரம் சூட்டினார். பத்மன் தனது ஏற்புரையில், உலகின் முதல் புரட்சியாளர் நாரதர். புரட்சி செய்வதை அதை கலகம் என்று கொச்சைப்படுத்துவது வழக்கம். அதைப் போன்றே நாரதர் கலகம் என்ற வார்த்தை உருவானது” என்றார்.
மங்கையர் மலர் மீனாட்சி பேசுகையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம்” என்றார்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழ் ஆசிரியர் பிரபுல்ல கேத்கர் சிறப்புரையாற்றினார். 1924-ம் ஆண்டு வங்காள மொழியில் வெளிவந்த உத்தண்ட மார்த்தாண்ட என்ற இதழில், நாரதரே உலகின் முதல் பத்திரிகையாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1955ம் ஆண்டு முதல் ஹிந்துஸ்தான் சமாச்சார் சார்பில் நாரதர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. நெருக்கடி நிலையின்போது அது நின்றுவிட்டது. பின்னர், 1994 முதல் விஸ்வ ஸம்வாத் கேந்திரம் சார்பில் கொண்டாடி வருகிறோம். காரல் மார்க்ஸ், இந்தியாவுக்கு வராமலேயே, இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் வரலாறு என்பதே இல்லை என்றும் மேற்கத்திய எண்ணமுடைய, ஜவஹர்லால் நேரு இந்தியா என்ற நாட்டை உருவாக்குவோம் என்றும் கூறினார். இன்றும் ஊடகத்தில் மேற்கத்திய முறைப்படியே சிலர் சிந்திக்கின்றனர்.
உண்மைகளின் அடிப்படையில் எழுதுவதே உண்மையான இதழியல். ஆனால், இன்று அது திரிக்கப்பட்டுள்ளது. அதை மாற்ற வேண்டும்” என்றார். விழாவில், வடதமிழக ஆர்.எஸ்.எஸ். செயலர் சாம்பமூர்த்தி, அமைப்பாளர் பி.எம்.ரவிகுமார், பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் பங்கேற்றனர்.