பதஞ்சலி நிறுவனத்தின் யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதியை வெற்று நடைமுறை என்று அறிவித்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சை வெடித்தது. இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐ.எம்.ஏ) உடனடியாக களத்தில் குதித்தது, அவரது கருத்துக்களுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. மேலும் காவல் நிலைய புகார், ரூ .1000 கோடி நஷ்டஈடு, அவதூறு வழக்கு என ராம்தேவை அச்சுறுத்தியது.
ராம்தேவின் கருத்து குறித்து சுகாதார அமைச்சகம் தனது மறுப்பை வெளிப்படுத்தியது, ராம்தேவ் தனது அறிக்கைகளைத் திரும்பப் பெற கடிதம் எழுதியது. ராம்தேவும் தனது அறிக்கையை வாபஸ் பெற்றார். ஆனால், அதே சமயத்தில் ஐ.எம்.ஏ குறித்து வெளியான பணத்தை பெற்றுக்கொண்டு தனியார் நிறுவனப் பொருட்களுக்கு சான்றளிப்பது, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால், தொற்றுநோயைப் பயன்படுத்தி மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற தன் பதவியையும் மருத்துவமனைகளையும் தவறாகப் பயன்படுத்துவது குறித்த அவரது பேட்டி, அவருக்கு எதிரான புகார்கள், வழக்குகள் போன்ற விஷயங்கள் அடுத்தடுத்து வெளியானதால் தனது நற்பெயரை இழந்த ஐ.எம்.ஏ, அதனை மறைக்கும் விதமாக, தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
ஐ.எம்.ஏவின் தற்போதைய மற்றும் கடந்தகால 17 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட அக்கடிதத்தில், ராம்தேவ் கருத்துக்கள் தேசத்துரோகமாக கருதப்பட வேண்டும், அவர் தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அரசின் முயற்சிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று கோரியுள்ளது ஐ.எம்.ஏ. முன்னதாக பாபா ராம்தேவின் 25 முக்கியக் கேள்விகளுக்கு ஐ.எம்.ஏ இதுவரை பதில் அளிக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.