உலகம் முழுவதும் பிரபலமான நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் 2 நிமிடங்களில் ரெடி என்ற விளம்பரத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகிப்போனது. ஆனால், உடனடி உணைவுகள் அனைத்தும் உடலுக்கு ஒவ்வாதது என பல மருத்துவர்கள், உணவுத்துறை நிபுணர்கள் எடுத்துக்கூறியும் யார் காதிலும் விழவில்லை. இந்நிலையில், நெஸ்லே நிறுவனத்தின் உள் அறிக்கையின்படி, அதன் 60 சதவீத உணவுப்பொருட்கள் ஆரோக்கியமானவை என்ற பட்டியலில் வரவில்லை அதில் மேகியும் ஒன்று. இதனால் தனது உணவு தொடர்பான இலாகாகளையும் உத்திகளையும் மாற்றுவது குறித்து நெஸ்லே ஆலோசித்து வருவதாகவும், மக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு ஊட்டச்சத்துடன் சீரான உணவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது நெஸ்லே. உலக உணவு மற்றும் பானங்கள் தயாரிப்புகளில் 37 சதவீதம் சந்தையைக் கொண்டுள்ளது நெஸ்லே. அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது மேகிக்கு ஒன்றும் புதிதல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே.