கோயில் மண்டபங்கள் மீட்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் ராஜகோபுரத்திற்கு முன்பு உள்ள நான்கு கால் மண்டபங்களை சிலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்தனர்.கடந்த 2018ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்தராயர் மண்டபத்தில் இயங்கிவந்த கடைகளில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது.இதையடுத்து கோயில்களில் உள்ள மண்டபங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று அறநிலையத்துறை அறிவித்தது.இதன் அடிப்படையில் கோயில்களுக்கு உள்ளும் வெளியிலும் மண்டபங்களில் செயல்பட்டு வந்த கடைகள் அகற்றப்பட்டன.ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் மண்டபத்தை ஆக்கிரமித்து கடை நடத்தியவர்கள் அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.அவர்கள் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மண்டபங்கள் வியாபார நோக்கத்திற்காக கட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, கடைகளை காலி செய்ய சொன்னது சரியே என்றும், மே 30க்குள் காலி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து, மண்டபங்களை ஆக்கிரமித்து எழுப்பப்பட்ட கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கையில் அறநிலையத்துறை ஈடுபட்டது.இது பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.