புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘வரலாற்றாசிரியர்’ மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான சோஹைல் ஹாஷ்மி மற்றும் மொழிபெயர்ப்பாளர் அன்யா மல்ஹோத்ரா இணைந்து டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியிருந்தனர்.ஆனால், மத்திய அரசு, கட்டுமானம் நடக்கும் இடத்திலுள்ள தங்கும் வசதிகள், உடனடி மருத்துவ வசதிகள், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிகைகள் குறித்து ஏற்கனவே தங்கள் பதிலை சமர்ப்பித்திருந்தது. மேலும், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்ரா, இந்த திட்டத்தை நிறுத்துவதற்கான குறிக்கோளோடு மட்டுமே இம்மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறினார். இதனை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் முன்னேற்பாடுகள், டி.டி.எம்.ஏ அதன் உத்தரவில் எங்கும் கட்டுமானப் பணிகளைத் தடை செய்யவில்லை, ஒப்பந்தத்தில் நேரம் முக்கியமானதாக இருப்பதால் நவம்பர் 2021க்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி சென்ட்ரல் விஸ்டா திட்டப்பணிகளை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.