பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல் முறையாக கலந்து கொண்டார். பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்து பேசிய தியாகராஜன், ‘ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பது ஏற்புடையது அல்ல. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எங்களுடைய மறுப்பை பதிவு செய்துள்ளோம். தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை. மாநிலங்களுக்கான நிலுவைத்தொகை வழங்க கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஜி.எஸ்.டி கூட்டத்தில் வலியுறுத்தினேன்’ என கூறினார். ஆனால், கூட்டத்தில் பேச வந்த கருத்தை நேரடியாக சொல்லாமல், மத்திய அரசுக்கு என்று வாக்காளர்கள் இல்லை, ஒன்றிய குடிமைப் பணி என்று ஒன்று கிடையாது என்று தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு, பிறகு நேரம் போதவில்லை என குற்றம் கூறுவது முறையா என நெட்டிசன்களும் பொது மக்களும் கேள்வி கேட்டு வருகின்றனர்.