சீனாவின் முயற்சியால் உலக சுகாதார மாநாட்டில் (WHA) தைவானை கலந்துகொள்ள உலக சுகாதார அமைப்பு (WHO) அனுமதிக்கவில்லை என்ற பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பில் தைவானுக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது.ஆனால் சீனாவின் தீவிரமான அரசியல் சூழ்ச்சிகளால், 2016ல் தைவான் அதில் இருந்து நீக்கப்பட்டது.முன்னதாக கொரோனா தொற்றுநோயை வெற்றிகரமாகக் கையாண்டதற்காக தைவான் உலகளவில் பாராட்டப்பட்டது.எனினும் தற்போதைய உலகலாவிய கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், உலக சுகாதார மாநாட்டில் தைவான் இடம் பெறாதது பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.தைவான் தன்னை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்ட பின்னரே தைவானை பங்கேற்க அனுமதிக்க உள்ளதாக சீனா கூறி வருகிறது.ஆனால், தைவான் ‘ஒரு சீனம்’ என்ற கொள்கையை ஏற்கவில்லை.தனது இறையாண்மையை காக்க தொடர்ந்து போராடி வருகிறது. முன்னதாக கொரோனா தொற்றுநோயை மோசமாகக் கையாண்டதற்காகவும், தொற்றுநோய் பற்றிய தகவல்களை மூடி மறைக்க சீனாவுக்கு உதவியதாகவும் உலக சுகாதார அமைப்பும் அதன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸசும் விமர்சிக்கப்பட்டனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. இந்நிலையில், “உலக சுகாதார அமைப்பு, அனைத்து மனித இனத்தின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் சேவை செய்ய வேண்டும். ஆனால் ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் அரசியல் நலன்களுக்கு அடிபணியக்கூடாது.” என தைவானின் சுகாதார அமைச்சர் சென் ஷிஹ் சுங் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.