பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை

பாரதத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2020 தொடக்கத்தில் அதிகமாக இருந்ததால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின. பொருளாதாரமும் வீழ்ச்சியைச் சந்தித்தது. மெல்ல இயல்பு நிலைத் திரும்பியதால் மீண்டும் வேகமெடுத்த நமது பாரதப் பொருளாதாரம் தற்போது கொரோனாவின் 2வது அலையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. இதனால் நமது பாரதப் பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதைக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. 2020 – 21 நிதியாண்டின் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் நமது பொருளாதாரம் 0.4 சதவீதம் வளர்ச்சி கண்டு நம்பிக்கையை ஏற்படுத்தியது.இந்நிலையில், சென்ற ஜனவரி – மார்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 1.3 சதவீதம் வளர்ச்சியைச் சந்திக்கும் என்று எஸ்.பி.ஐ ரிசர்ச் ஆய்வறிக்கை கூறியுள்ளது.எனினும், 2020-21 முழு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.2020-21 நிதியாண்டில் பாரதப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை வரும் மே 31ல்’தேசிய புள்ளியியல் அலுவலகம்’ வெளியிடவுள்ளது.அதற்கு முன்பாகவே எஸ்.பி.ஐ ரிசர்ச் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இதுவரையில் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கைகளை வெளியிட்டுள்ள 25 நாடுகளில் பாரதம் ஐந்தாவது மிக வேகமாக வளரும் நாடாக இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.