கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளன. பாரதத்திலும் அதற்கான பூர்வாங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியும், குழந்தைகள் நல நிபுணருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் ‘மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணி, பாரதத்தில் தீவிரமாக நடக்கிறது. இது அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும். அதற்குள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து, குழந்தைகளின் மூச்சு குழாயில் தொற்று ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்ததும், குழந்தைகளுக்கு தொற்று பரவுவது கட்டுக்குள் வந்துவிடும்.’ என தெரிவித்துள்ளார்.