கரோனா சிகிச்சை புதிய கட்டணம்

தமிழ்நாடு அரசு பொது சுகாதார திட்டம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டணம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, ஒரு நாள் கட்டணமாக 5,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதியோடு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒருநாள் கட்டணமாக 15,000 ரூபாயும், வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சை பெறுபவர்களுக்கு, ஒருநாள் கட்டணமாக 35 ஆயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், Non-invasive ventilation என்று சொல்லக்கூடிய, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஊடுருவாத வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நாள் ஒன்றின் கட்டணமாக 30 ஆயிரம் ரூபாயும், ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாகக் குறைப்பதற்கு மட்டுமான ஒருநாள் கட்டணமாக ரூபாய் 25 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர் காப்பீட்டு திட்டத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 மற்றும் 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.