பாகிஸ்தானில் விரைவில் உள்நாட்டு போர் வெடிக்கும்

ஹாங்காங்கின் ‘ஏசியன் டைம்ஸ்’ என்ற இணைய பத்திரிகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் வல்லுனர்கள் சிலர், எழுதியுள்ள கட்டுரையில், ‘எந்த ஒரு சமூகத்திலும், மோசமான நிர்வாகம், ஊழல், வறுமை போன்றவையே வன்முறை, பிரச்னைகள் வெடிக்க காரணமாகின்றன. அவையே உள்நாட்டு போராகவும் மாறுகின்றன. இதே காரணத்தினால்தான் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. பாகிஸ்தான் தனி நாடாக உருவானது முதல் அதற்கான லட்சியத்தை அந்த நாடு எட்டவில்லை. பாகிஸ்தானில் சகிப்புத்தன்மை, சமத்துவம் என்பது அறவே இல்லை. அரசை, ராணுவத்தை விமர்சிப்பவர்கள் வெளிநாடுகளின் ஏஜெண்டுகளாக சித்தரிக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இங்கே, காலனி ஆதிக்கம் எனப்படும் அரசு அதிகாரிகளின் ஆதிக்கம் மிக அதிகம். அவர்கள் சீருடை அணிந்த ஜமீன்தார்கள் போல் செயல்படுகின்றனர்.

அதிகார வர்க்கத்திற்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்ட கல்வி முறையால் அங்கு சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ உருவாகவில்லை. பாகிஸ்தான்  தலைவர்கள், வறுமை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை. அரசு நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளது. பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப், கைபர் பக்துன்வா மாகாணங்களில் காவல்துறை, ராணுவத்தால் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மக்கள் வறுமையால் கஷ்டப்படும் நிலையில், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ராணுவ தளபதிகள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கின்றனர். வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது, மக்களிடம் கோபம், வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பிரச்னை, இந்திய எதிர்ப்பு ஆகியவற்றை வைத்தே, மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என அவர்கள் தவறாக எண்ணுகின்றனர். இந்த நிலை நீடித்தால் உள்நாட்டு போர் ஏற்படுவதை தடுக்க முடியாது என, உலக வங்கி ஏற்கனவே தெரிவித்து உள்ளது. அங்கு மக்கள் போராட்டம் எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம். பாகிஸ்தான் பல துண்டுகளாக உடைவதையும் யாராலும் தடுக்க முடியாது.’ தெரிவித்துள்ளனர்.