கொரோனா எனும் பெரும் தொற்றால் கடந்த ஒரு வருடமாக நேரடிப் பள்ளிகள் நடக்கவில்லை. பல பள்ளிகள் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் எடுத்து வருகின்றன. இந்த பெரும் தொற்றுக் காலம் முடிந்து அனைத்தும் விரைவில் சரியாகும் என நம்புவோம். பிறகு பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் காலத்தில், ‘விருப்பம் உள்ளவர்கள் பள்ளிக்கு நேரடியாக வந்து வழக்கம்போல பாடங்கள் படிக்கலாம் அல்லது ஆன்லைன் வழியாக கற்க விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாகவே வகுப்பைத் தொடரலாம்’ என அரசு அறிவித்து அதற்கான வழிவகைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக பெண் குழந்தைகளை வீட்டில் இருந்தே கல்வி கற்க மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்கலாம்.
இதற்காக, ஆன்லைன் ஆசிரியர்கள், நேரடி ஆசிரியர்கள், வீடியோ வகுப்புகள், சந்தேகம் கேட்க ஹெல்ப் லைன் என சில கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியிருக்கும். ஆனால், பலர் ஆன்லைன் வகுப்பை தேர்ந்தெடுப்பர் என்பதால், தற்போது உள்ள ஆசிரியர்களைக் கொண்டே அந்தத் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். இந்த கல்வி முறை ஒன்றும் புதியது அல்ல. இத்தாலி போன்ற பல வெளிநாடுகளில் இந்த முறை ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது. எனவே, தேவைப்பட்டால் அங்கிருந்து ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
இதனால், பல நன்மைகள் உள்ளன. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வெகுவாகக் குறையும். ஆன்லைனில் கல்வி பயிலும் குழந்தைகள், வகுப்பு பிடிக்கவில்லை, கல்வித் தரம் சரியில்லை என்றால், அலைபேசி எண்ணை நாம் விரும்பும் நிறுவனத்துக்கு மாற்றுவது போல, மாற்று வகுப்பையோ அல்லது மாற்று பள்ளியையோகூட எளிதில் தேர்ந்தெடுக்கலாம். எனவே, இதற்காக அரசு பிரத்தியேக சட்டத்தை இயற்றுவதும் உகந்ததே. இதனால், பள்ளிகள் இடையே போட்டி ஏற்படும் என்பதால் கல்வித்தரம் உயரும், கல்விக் கட்டணம் குறையும் என்பது போன்ற பல நன்மைகள் உண்டு.
குறிப்பாக விரைவில் அமல்படுத்தப்பட உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு இது உத்வேகம் அளிக்கும். எதிர்ப்போரின் வாயை அடைக்கும். இந்த கல்விமுறையை, கல்லூரிகளுக்கும்கூட விரிவுபடுத்தலாம். அதனால் லவ் ஜிகாத், பாலியல் அத்துமீறல்கள், ரோடுசைடு ரோமியோக்களின் அட்டகாசங்கள், தேவையற்ற சகவாசங்கள், தீய பழக்கவழக்கங்கள், போதை பொருள் பயன்பாடு போன்றவை இல்லாமல் கல்லூரி மாணவ மாணவிகள் படித்து முன்னேறுவார்கள்.
நமது முயற்சியில் ஏற்படும் தடங்கல்கள், பிரச்சனைகள், சவால்கள்தான் நமது சிந்தனையைத் தூண்டும், பல புதிய வழிகளைக் காட்டும். எனவே, தற்போது நமக்கு ஏற்பட்டுள்ள கொரோனா எனும் பிரச்சனை, இது போன்ற பல நல்ல விஷயங்களை செய்ய நமக்கு வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறது. அதனை பயன்படுத்திக்கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு செல்வது நமது கையில்தான் உள்ளது. அரசும் இது குறித்து சிந்திக்கலாமே.!
ஜெ எஸ் சரவணகுமார்