ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அங்கு கிடைக்கும் சிகிச்சை வசதியை பலப்படுத்தும் நோக்கில், ‘ஆயுஷ்மான் – பாரத்’ திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு ஆரோக்கிய சேவை வழங்கியதில் 95 மதிப்பெண்கள் பெற்று நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை கர்நாடகா பெற்றுள்ளது. கர்நாடகாவில் உள்ள 11 ஆயிரத்து, 595 மையங்களை தரம் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. சுகாதார ஊழியர்களின் உழைப்பால்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மைசூருவில் மாவட்டம் முழுவதும், 150 கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பு நடவடிக்கைகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. தொற்று ஏற்பட்ட முதல் ஐந்து நாட்கள் மிகவும் முக்கியமானது. தொற்று உறுதி செய்யப்பட்ட உடன் அவர்களுக்கு தேவையான மருந்துகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைகிறது. கொரோனா தொற்றை குறைப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், நுாறு சதவீதம் கொரோனா தொற்று இல்லாத கிராமங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என மைசூரு மாவட்ட ஆட்சியர் ரோகினி சிந்தூரி தெரிவித்துள்ளார்.