கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொண்டது பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கம்யூனிச அரசு. முதல்வர் பினராயி விஜயன் தனது புதிய அமைச்சரவையை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தனது அமைச்சரவையில் புதிய முகங்களை நியமிப்பதாகக்கூறி சுகாதார அமைச்சராக இருந்த ஷைலஜா டீச்சர் உட்பட பல முன்னாள் அமைச்சர்கள் அனைவரையும் கைகழுவினார். அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள ‘இளம்’ புதிய முகங்களில் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸும் அடங்குவார். பியோபிரே தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற முகமது ரியாஸ் பினராயி விஜயனின் மகள் வீணாவை மணந்தார். இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (டி.ஒய்.எப்.ஐ) தலைவராக இருக்கும் முகமது ரியாஸுக்கு சர்ச்சைக்குரியவர் என்ற பெயரும் உண்டு. டி.ஒய்.எப்.ஐ, பின்னர் சி.பி.ஐ-எம் ஆகிய இடதுசாரி அமைப்புகளில் பணியாற்றிய முகமது ரியாஸ், விமான கட்டண உயர்வு மற்றும் தேசிய விமான சேவைகள் குறைப்பை எதிர்த்து, கோழிக்கோட்டில் உள்ள ஏர் இந்தியா அலுவலகம் அருகே வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டதற்காக நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.