குருவுக்கு மரியாதை

நேற்று முன்தினம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டி.ஆர்.டி.ஓவின் துணை ஆய்வகமான நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் நிறுவனம் (இன்மாஸ்) உருவாக்கிய உள்நாட்டு கொரோனா எதிர்ப்பு மருந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டி.ஜி) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மருந்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்த இன்மாஸ் மையத்தின் இயக்குனர் டாக்டர் ஏ.கே.மிஸ்ரா, இதற்கு தனது இயற்பியல் குருவான ராஜ்நாத் சிங்குக்கு தனது நன்றியை தெரிவித்தார். ‘கடவுளும் என் குருவும் இருவரும் எனக்கு முன் நின்று கொண்டிருந்தால், நான் முதலில் யாரை போற்ற வேண்டும்? என்னை வழிநடத்தி என்னை கடவுளின் பாதையில் அழைத்து செல்பவர் குரு என்பதால் அவரைதான் நான் முதலில் போற்றுவேன்’ என்ற கபீர்தாஸிரின் புகழ்பெற்ற ‘குரு கோவிந்த்…’ என்ற கவிதையை சொல்லி, தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை போற்றியுள்ளார். 1988களில் உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள கே.பி. முதுகலை கல்லூரியில் ராஜ்நாத் சிங் தனது இயற்பியல் பேராசிரியராக இருந்ததை டாக்டர் மிஸ்ரா நினைவு கூர்ந்தார். ஆம், பா.ஜ.கவில் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, கே.பி. முதுகலை கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக இருந்தார் ராஜ்நாத் சிங். பின்னர் அவர் உத்தரபிரதேசத்தில் முதல் பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சரானார். அங்கு கல்வி முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். வரலாற்று பாடப்புத்தகங்களை மீண்டும் எழுத உத்தரவிட்டார். பல புதிய முயற்சிகலை முன்னெடுத்தார் ராஜ்நாத் சிங். அவர் பாடத்திட்டத்தில் வேத கணிதத்தையும் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.