கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில முதல்வர்கள், மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 9 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தடுப்பூசி விநியோகத்தை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி வீணாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். சரியான நடைமுறைகளை நாம் பின்பற்றினால் தடுப்பூசி வீணாவதை முற்றிலும் தடுக்கலாம்’ என்றார். மேலும், ‘கொரோனாவுக்கு எதிரான போரில், அதிகாரிகள்தான் களப்பணியாளர்களாக உள்ளனர். கொரோனா காலத்தில், உங்களுக்க ஏற்பட்ட அனுபவம், எதிர்காலத்திலும் கைகொடுக்கும். எந்த சூழ்நிலையையும் திறக்பட சமாளிப்பதற்கு அது உங்களுக்கு உதவும். கொரோனா இரண்டாவது அலையில், கிராமப்புற பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். என் கிராமத்தில் கொரோனாவை நுழைய விடமாட்டேன் என தீர்மானம் எடுங்கள்’ என அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியதுடன் பாராட்டவும் செய்தார்.