ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சூர்ய பிரதாப் சிங், கடந்த சில தினங்களுக்கு முன்பு உ.பி.யின் பாலியா அருகே கங்கை நதியில் உடல்கள் மிதந்து வந்ததைப் பார்த்ததாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். மேலும் உன்னாவ் நகருக்கு அருகே கங்கை நதிக்கரையில் ஜே.சி.பி மூலம் பள்ளம் தோண்டி 67 உடல்களை மொத்தமாக போட்டு புதைத்ததாகவும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக உன்னாவ் நகர பொதுமக்கள் கோட்வாலி காவல் நிலையத்தில் சூர்ய பிரதாப் சிங் மீது புகார் செய்தனர். உன்னாவ் நகரில் உடல்களை புதைத்ததாக சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருவதாக அதில் கூறியிருந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பிரதாப் சிங் பதிவிட்ட புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, கடந்த 2014-ம் ஆண்டு உன்னாவ் அருகே கங்கை நதியில் மிதந்து வந்த உடல்களின் புகைப்படம் அது என தெரியவந்தது. இதையடுத்து, சூர்ய பிரதாப் சிங் மீது, இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் உ.பி. பொது சுகாதாரம், தொற்று நோய் தடுப்பு அவசர சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.