கோடைக்காலம் என்று சொன்னாலே நீண்ட விடுமுறை, சுற்றுலாதான் அனை வருக்கும் நினைவுக்கு வரும். அதனால், கோடை என்றால் அனைவருக்குமே உற்சாகம், கொண்டாட்டம், கலகலப்பு. கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய பழவகைகள், குளிர்பானங்கள் என பல சுவையான சிறுவயது அனுபவங்கள் நமக்கு நினைவுக்கு வரும். நாம் வளர்ந்த பிறகும் கூட கோடைக்காலம் என்று வந்துவிட்டால் ஓர் உற்சாகமான சூழல் ஏற்படும். கோடைக்காலத்தில் ஒருசில பிரச்சினைகளும் உடல் உபாதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அதில் முக்கியமானவை சருமப் பிரச்சி னைகள். எக்ஸிமா, சொரியாஸிஸ் போன்றவை. இதைத்தவிர, நீர்சத்துக் குறைபாடு, வயிறு உபாதைகள், அதிக வியர்வை வெளிப்பாடு, உடல் துற்நாற்றம், உடற்சோர்வு, அதிக ரத்த அழுத்தம், நிரிழிவு, கொலஸ்ட்ரால், சிறுநீரகக்கல் போன்ற பிரச்சனைகளும் கோடைக்காலத்தில் அதிகரிக்கும். அதிகமாக தண்ணீர் பருகுபவர்களுக்கே இது பிரச்சனை என்றால், தண்ணீர் அதிகமாக பருகாதவர்களின் நிலை!
இதுபோன்ற உடல் உபாதைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இயற்கை மருத்துவம், யோகா முறைகளில் இருக்கும் சில எளிய வழிமுறைகளைக் காண்போம். கோடைக்காலத்தில் அனைவரும் தண்ணீரை அதிகமாக பருகவேண்டும். நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பவர்கள் அதை மூன்றரை லிட்டராக அதிகரித்துக்கொள்ளலாம். உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்தவேண்டும்.
தினமும் ஒரு மணி நேரமாவது யோகா பயிற்சி செய்வது அவசியம். சாதாரணமாக நாம் செய்யும் சில கடினமான உடற்பயிற்சிகளை கோடைக்காலத்தில் குறைத்துக்கொள்வது நல்லது. விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்யலாம். ஆனால், வெயில் அதிகரிக்கும் போது வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே நம்மால் இயன்ற யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவை ஒரு மணி நேரம் மேற்கொள்ளலாம். இதனால் நம் உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறி ஆரோக்கியம் மேம்படும்.
வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் உடலைக் குளிர்விக்க ஒரு பக்கெட் தண்ணீரில் அதன் சூட்டை குறைக்க, ஓரிரு சிறிய ஐஸ்கட்டிகளை சேர்த்து அதில் நமது இரண்டு பாதங்களையும் வைத்து உடலைக் குளிர்விக்கலாம். தேவைப்பட்டால், இதில் ஒரு சில துளிகள் ‘பெப்பர் மின்ட் ஆயில்’ சேர்க்கலாம். அது நம் உடலையும் மனதையும் குளிர்விக்கும். குளிர்ந்த நீரில் ஷவர் குளியலும் செய்யலாம். கோடையில் வெந்நீரைத் தவிர்ப்பதுடன் காரம், புளிப்பு சுவைகளையும் குறைப்பது நல்லது. ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளான வறுத்தது, பொரித்தது, அசைவம் போன்றவற்றை தவிர்த்து, ஜீரண மண்டலத்தைப் பாதுகாக்கும் கோடைக்கால உணவுகளான நீர்சத்தும் நார்சத்து அதிகம் உள்ள இயற்கைப் பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்வது உத்தமம். வெட்டிவேர் போட்டுக் குடிக்கும் பானைத்தண்ணீர் சுவையாக, சுகமாக, ஆரோக்கியமாக நம்மை வைக்கும். சுருக்கமாக சொல்வதென்றால், கோடைக்காலத்தில் எப்போதும் நீருடன் தொடர்பிலிருப்பது நல்லது.
கோடையில், வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உஷ்ண நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கும். உடற்சூடு சம்பந்தப்பட்ட பெண்களின் பல்வேறு நோய்களுக்கும் இது உகந்தது. நல்லெண்ணெயை உடலில் தேய்த்து பத்து நிமிடம் வெயிலில் நின்று குட்டியாக ஒரு சன்பாத் எடுத்த பிறகு குளித்துவிடுங்கள். இரவு எட்டு மணிக்குள் உணவை உண்பது இரவில் உடல் அதிக சூடாகாமல் காத்து, நல்ல உறக்கத்தை தரும். படுப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரைக் குடிக்கலாம், படுக்க செல்லும் முன் பாலில் ஏலக்காய், மஞ்சள், மிளகுத்தூள், போன்றவை கலந்து குடிப்பது ஜீரணத்திற்கு நல்லது. மேலும், தற்போதுள்ள கொரோனா போன்ற நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். சமையலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பிராணாயாமத்தில் சீத்கரி, சீதளி போன்றவை செய்யலாம். இது உடலைக் குளிர்விக்க உதவும். உடைகளில் தளர்வான வெளிர் நிற பருத்தி ஆடைகளையே தேர்ந்தெடுத்து உடுத்துங்கள். ஷூ அணிவதை கூடுமானவரை தவிர்த்திடுங்கள்.இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது உங்கள் கைகுட்டையை நீரில் நனைத்துப் பிழிந்து தலைமீது போட்டுக்கொண்டு அதன் மீது ஹெல்மெட் போட்டுக்கொள்ளுங்கள். இது தலை அதிக சூடாகாமல் காக்கும், முடி கொட்டுவதையும் குறைக்கும். கொரோனா காரணத்தால் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஆனால், அதுவும் உடல்சூட்டை சற்று அதிகரிக்கும். இதனால் அதை லேசாக ஈரப்படுத்தி போட்டுக்கொள்வது உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள உதவும்.
வீட்டில் டேபிள் ஃபேன் பயன்படுத்தினால் அதன் முன்னால் ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டி, குளுமையான நீர், ஈரக்கோணியை வைப்பதும் ஜன்னல் ஸ்கிரீனில் தண்ணீர் தெளித்து வைப்பதும் அறையை குளுமையாக வைத்திருக்கும். அதேபோல, மாலை வேளையில் வீட்டின் மொட்டை மாடியிலும் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தெளித்து வைப்பது இரவில் வீட்டை குளுமையாக வைக்க உதவும். கோடைக்காலத்தில் இதைப் போன்ற சில எளிய நடைமுறைகளைக் கடைபிடித்து கோடையை இனிமையாக அனுபவித்திடுங்கள்.
கட்டுரையாளர்: துறைத்தலைவர், பேராசிரியை – அரசு இயற்கை, யோகா மருத்துவமனை, அரும்பாக்கம், சென்னை