விஸ்வகர்மா பூங்கா?
மே முதல் தேதி மே தினம் என்ற பெயரில் அனுஷ்டிக்கப்படுகிறது. கம்யூனிஸ்டு இயக்கம் தனது சர்வதேச சித்தாந்த திணிப்பு தந்திரத்தின் ஒரு அங்கமாக பல நாடுகளில் மே தினத்தை திணித்துள்ளது. அழுத்தமான தேசிய கலாச்சாரம் கொண்ட பாரதம் அதற்கு தொடர்ந்து தலைவணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்கு செப்டம்பர் 17 அன்று வரும் ‘விஸ்வகர்மா ஜெயந்தி’ கம்பீரமான தொழிலாளர் தினம் என்ற பாரம்பரியம் உள்ளது. சமய பாகுபாடு இல்லாமல் எல்லா சமயங்களைச் சார்ந்த தொழிலாளர்களும் விஸ்வகர்மா ஜெயந்தியை கொண்டாடி வருகிறார்கள் என்பது எதார்த்தமான உண்மை. பாரத அரசு தொழிலாளர்களுக்கு வழங்கும் விருது கூட சிரமவீர் என்பதற்கு பதிலாக ‘விஸ்வகர்மா சிரமவீர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரான தத்தோபந்த் தெங்கடி இன்று தேசத்தின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கத்தை நிறுவியவர். அவர் 1985ல் சீனா சென்றபோது சீனத் தொழிலாளர்களின் மனச்சாட்சிக்கு ஒரு கேள்விக்கணை தொடுத்தார்: ‘உங்கள் நாட்டில் 1925ல் நடந்த மிகப்பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தத்தை உங்கள் தேசிய தொழிலாளர் தினமாக அனுஷ்டிக்கலாமே, மே தினம் எதற்கு?’ சீன தொழிற்சங்க வாதிகளுக்கும் இது நியாயமாகப் பட்டது. (‘ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்’ பக்கம் 425)
மே தினத்தின் சோக விளைவு என்ன என்றால், தொழிலாளர்களுக்கு தேசிய உணர்வு ஏற்படாமல் செய்துவிடுகிறது; தொழிலாளர் ஒற்றுமை வரவிடாமல் தடுக்கிறது. (தடுப்பது பாரத நாட்டில் உள்ள சுமார் 70 விதமான கம்யூனிஸ்ட் குழுக்கள் என்றாலும்). அதுமட்டுமல்ல, மே தினம் ஒரு மரணத்தின் நினைவு நாள். ஏன் பாரதம் உட்பட எல்லா தேசங்களும் அதை கர்மசிரத்தையுடன் ‘கொண்டாட’ வேண்டும்? காலம் மாற மாற கருத்து மாறும், மே தினம் மாறும், விஸ்வகர்மா ஜெயந்தி வெற்றிக்கொடி நாட்டும்.