இன்றைய தேர்தல் நடைமுறைகளுள் கட்சியாளர்கள் சிலர் பின்பற்றும் பேச்சின் அளவு காது கொடுத்துக் கேட்க முடியாத தரம் தாழ்ந்துவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி நாள் தோறும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. தரம் தாழ்ந்த இந்தப் போக்கு தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மிகவும் கவலை அளிக்கும் வகையில் வளர்ந்து காணப்படுகிறது. கலைஞர் வாசகர் வட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர், ”ஊடகங்களை மும்பை ரெட்லைட் ஏரியா மாதிரி நடத்துகிறார்கள்” என்று அநாகரிகமாகப் பேசினார். அது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட ஒரு துறையில் சமூகத்தை குறிப்பிட்டும் விமர்சித்தும் பேசினார். இவரது பேச்சு சமூக ஊடகங்களில் வெளியாகி, சர்ச்சையாகி, கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டார்.
பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வெளி, ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகரித்திருக்கிறது. அது வரம்பில்லாமல் பேசுவதைக் கட்டுப்படுத்தி இருக்கிறது. கட்சிகளில் தலைவர்கள் என்பதைத் தாண்டி, கட்சியின் கருத்துகளைப் பிரசாரம் செய்யக் கீழ்மட்ட பேச்சாளர்கள் என்ற ஒருவகையினர் உருவாகின்றனர். இந்தப் பேச்சாளர்கள் பேச்சை கேட்க ஒரு பார்வையாளர்கள் கூடுவர்களின் இந்தப் பார்வையாளர்கள் பலரும் கூலிவேலை செய்யும் உழைக்கும் மக்கள். அதனால், அவர்களுடைய மொழியில் அவர்களுக்கு நெருக்கமாகப் பேசுவதாக நினைத்து நகைச்சுவையாக – கிண்டலாக பேசுவது என்ற நாகரிகமற்ற ஒரு கலாச்சாரம் இந்தப் பேச்சாளர்களிடம் உருவானது. தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் போன்றோர் இப்படிப் பேசியே திறம்பட்ட நமது ஜனநாயகம் காண விரும்பிய அரசியல் நாகரிகத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர்.
இது திமுக, அதிமுக எனப் பல கட்சிகளிலும் சமீபகாலமாக இந்தப் போக்கு அதிகரித்து இருக்கிறது. விளைவு… இந்த தாக்கத்தில் பெரிய தலைவர்களும் தம்மை மறந்து பேசுவதுதான். இன்றைய காலகட்டம் வரை காந்தியவாதிகள், ஏன் மார்க்ஸிஸ்ட்கள், இடதுசாரிகள்கூட இப்படி அநாகரிகமாக பேசி நாம் பார்த்ததில்லை.v பொதுவாக, அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள் என்ன என்பது குறித்து தோழர்களுக்கோ, தொண்டர்களுக்கோ, அடுத்த கட்ட தலைவர்களுக்கோ வளமையான பயிற்சி கொடுத்து, கொள்கைகள் சார்ந்த விஷயங்க ளைப் பேசுவது என்பது ஒருகாலத்தில் இருந்தது. மக்களும் அவற்றைக்கேட்டு கட்சிகளின் அவ்வப்போதைய கொள்கை நிலையினை டீக் கடை முதல் கார்பரேட் காரிடார் வரை அலசிய காலம் ஒன்றுண்டு.
ஆனால், லேட்டஸ்ட் அரசியல் நிலை இப்படித்தான்: கட்சியின் முக்கியக் கொள்கை கோட்பாடு என்ன, கட்சிகளின் முக்கியமெனக் தலைவர்கள் சிலருக்கே தெரிவதில்லை. “தேர்தல் வந்தால் போட்டியிட வேண்டும். வெற்றி பெறவேண்டும், அவ்வளவே,” என்னும் சூழல் இன்று ஏற்பட்டு விட்டது. ஜெயலலிதா இருக்கும்வரை இப்படிப் பேசமுடியாது. ஏதாவது சர்ச்சையாகப் பேசிவிட்டால் உடனே பொறுப்பில் இருந்து நீக்கிவிடுவார். அந்த அளவு அரசியல் ஆளுமை கொண்டிருந்தார்.
அநாகரிக ட்ரெண்ட்டிற்கு இன்னொரு காரணம்: பொதுவாகக் கட்சிப் பிரமுகர்கள் ஏதேனும் நலத்திட்டங்களைப் பேசினால் என்ன வரவேற்பு கிடைக்குமோ அதைவிட சிறப்பாக சர்ச்சையாகக் பேசினால் கிடைக்கிறது. ஊடகங்களால் அலசவும் படுகிறது.
அதனால், எதையாவது சொல்லி தன்முகமும் தெரியவேண்டும், மக்களிடம் செய்தியும் சென்றடைய வேண்டும் என அரைகுறை மயக்கத்தில் பேசுகிறார்கள். இதுபோல, அரசியல் தலைவர்களின் அநாகரிகமான பேச்சு இளைஞர்கள் மத்தியில் அரசியலைப் பற்றி அவநம்பிக்கையை விதைக்கிறது, வெறுப்பை பரப்புகிறது என காட்சியாளர்கள் உணரவேண்டும். இரட்டை அர்த்த வசனத்தைப் பேசி கைத்தட்டு வாங்கினால் அதுவே ட்ரெண்ட் என்கின்ற தப்பான எண்ணம் குறிப்பிட்ட சில கட்சியினரிடையே உருவாகி வருகிறது. இப்படிக் கைதட்டல் வாங்கியபின்னர் அவ்வாறு அநாகரிகம் தாங்கிய பேச்சுகளைப் பேசிப்பேசி உரமும் இட்டு விஷ விதைகளை ஊன்றியும் விடுகிறார்கள்.
அதனால், இரட்டை அர்த்த பேச்சாளர்கள் வந்தால்தான் கூட்டம் அதிகமாக இருக்கும், கைத்தட்டல் இருக்கும் என்னும் போக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அரசியல் கட்சிகள் அதை ஊக்குவிக்கின்றன. அதேபோல, அரசியல் தலைவர்கள் என்ன பேசினாலும் ஒரு வருத்தம் தெரிவித்துவிட்டு போய்விடலாம் என்னும் மெத்தனப்போக்கும் அதிகரித்துவருகிறது. அரசியல் கட்சிகள் இத்தகைய போக்கைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிற மாதிரி தெரியவில்லை.
ஊடகங்களுள் சில இதுபோன்ற சர்ச்சைப் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளித்து எரிகிற கொள்ளியில் மேலும் எண்ணெய்யை இட்டுத்தகிக்க வைக்கின்றன. அதனாலும் இந்தப் போக்கு வளர்ந்துள்ளது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நாகரிகமான வார்த்தைகளால் மட்டுமே ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வழக்கம் இருந்தது. அரிசிப் பிரச்சினை நிலவியபோதுகூட அண்ணா தமது பேச்சில் ”தற்போது அரசியலைவிட அரிசி இயலே மிக முக்கியம்” என்று நா நயத்துடன் கண்ணியம் காத்துப் பேசினார்.
தனிநபர் விமர்சனங்களுக்கும் தரம் தாழ்ந்த பேச்சுகளுக்கும் அப்போதெல்லாம் இடமே இருந்தது இல்லை. ‘‘இவைபோன்ற எதிர்மறை செயல்பாடுகள் நீண்டகால நோக்கில் கைகொடுக்காது. மேலும் இருக்கும் நன்மதிப்பையும் இழக்க நேரிடும்,” என்கின்ற கோணத்தில் சிந்தித்து, அரசியல் கட்சி உயர்மட்ட தலைவர்கள் உணர்ந்துகொண்டு அநாகரிகமாக பேசும் தலைவர்கள்மீது நடவடிக்கை எடுத்து இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.